`தேர்தல் நிதி கொடுங்கள்!'- வி.சி.க தொண்டர்களுக்கு திருமாவளவன் கடிதம்  | thirumavalavan asks donation for facing election

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (25/03/2019)

கடைசி தொடர்பு:14:10 (25/03/2019)

`தேர்தல் நிதி கொடுங்கள்!'- வி.சி.க தொண்டர்களுக்கு திருமாவளவன் கடிதம் 

திருமாவளவன்

சிதம்பரத்தில், பானை சின்னத்தில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தேர்தல் நிதி கேட்டு கடிதம் எழுதியுள்ளார். 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கடந்த 23.3.2019-ல் கட்சித் தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ``அன்பார்ந்த தோழர்களே, என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே, உங்கள் அனைவருக்கும் என் பணிவார்ந்த வணக்கம். 

  திருமாவளவன் எழுதிய கடிதம்

நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், விடுதலைச் சிறுத்தைகள், தி.மு.க தலைமையிலான கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவது யாவரும் அறிந்தது. தேர்தல் என்பது எத்தகைய சவால்கள் நிறைந்த களம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அவற்றில் முதன்மையானது, பொருளாதார நெருக்கடியே ஆகும். இந்தத் நெருக்கடியை எதிர்கொள்ள உங்களின் மகத்தான பங்களிப்பும் தேவை என்பதை சுட்டிக்காட்ட விழைகிறேன். பொருளாதாரச் சிக்கலை எதிர்கொண்டு வெற்றியை பெறுவதற்குத் தங்களால் இயன்ற அளவில் நிதியுதவி அளித்திட வேண்டுகிறேன். வேளச்சேரியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வங்கிக் கணக்கில் நன்கொடை செலுத்தி உதவுமாறு வேண்டுகிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தக்  கடிதத்தையடுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் வங்கிக் கணக்கில் நன்கொடை செலுத்திவருகின்றனர். தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பிடித்திருந்தாலும், தேர்தல் செலவுகளை எதிர்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால்தான், நிதியுதவி பெற தொண்டர்களுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.  

பானை சின்னத்துடன் திருமாவளவன்

சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர். உதயசூரியன் சின்னம் என்பதால், ரவிக்குமாருக்கு எந்தவித சிக்கலும் இல்லை. அதே நேரத்தில், தனிச் சின்னம் என்பதால் திருமாவளவனுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால்தான், நிதி திரட்ட திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.