`குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது' - தினகரனுக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம் | Can not assign a cooker logo for ammk says election commission

வெளியிடப்பட்ட நேரம்: 14:36 (25/03/2019)

கடைசி தொடர்பு:14:36 (25/03/2019)

`குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது' - தினகரனுக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

டிடிவி தினகரன்

இரட்டைஇலைச் சின்னம் அ.தி.மு.க-வுக்குத்தான் என்று டெல்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியது. அதில், டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், அ.ம.மு.க-வுக்குத் தேர்தலில் போட்டியிடும் வகையில் குக்கர் சின்னத்தை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ``அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இதுவரை பதிவு செய்யப்படாத கட்சி. பதிவு செய்யப்படாத கட்சியின் வேட்பாளர்கள் சுயேச்சைகளாகதான் கருதப்படுவர். அதனால் அவர்களுக்குக் குக்கர் சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்க முடியாது" எனத் தெரிவித்தனர். 

உச்ச நீதிமன்றம்

இதைக் கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான எழுத்துபூர்வ வாதத்தைத் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு வழக்கை நாளைய தேதிக்கு ஒத்திவைத்தனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் சுயேச்சைகளாகத்தான் அ.ம.மு.க-வினர் போட்டியிட வேண்டி இருக்கும். இதுதொடர்பாக பேசியுள்ள டிடிவி தினகரன், ``குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் தனிச் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிடுவோம். நாளை காலை வழக்கு முடிந்தவுடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வார்கள்" எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க