`நான் எம்.பி-யானால் ஆறே மாதத்தில் ரயிலை வரவழைப்பேன்!'- வேட்புமனு அளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் | Congress leader EVKS Elangovan Slams Teni ADMK Candidate

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (25/03/2019)

கடைசி தொடர்பு:09:41 (26/03/2019)

`நான் எம்.பி-யானால் ஆறே மாதத்தில் ரயிலை வரவழைப்பேன்!'- வேட்புமனு அளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தேனி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், இன்று மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம்  வேட்பு மனுவை தாக்கல்செய்தார். அப்போது, தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலாளர் சாகுல் ஹமீது, காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

 ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், "தேனி மாவட்டத்தில் மீட்டர்கேஜ் பாதையாக இருந்த ரயில் பாதை, 20 வருடங்களாக பிராட் கேஜ் பாதையாக மாற்றப்படாமலே உள்ளது. இதற்காக நிதி ஒதுக்கியும், பல கான்ட்ராக்டர்களிடம் இந்தப் பணிகள் ஒப்படைக்கப்பட்டும் இன்னும்  நிறைவேறாமல் இருக்கக் காரணம், தேனியைச் சேர்ந்த அமைச்சர்தான். எனக்குத் தெரிந்த ஆந்திரா கான்ட்ராக்டர் கூறும்போது, தேனி அமைச்சர் 30 சதவிகிதம் கமிஷன் கேட்கிறார் என்றார். அதனால்தான், தேனி மாவட்டம் ரயில் இல்லா மாவட்டமாக உள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்யும்  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

நான் தேனி எம்.பி-யானால், 6 மாதத்தில் பணிகள் அனைத்தையும் முடித்து, தேனிக்கு ரயிலை வரவழைப்பேன்" என்றார். தேனி அமைச்சர் என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மறைமுகமாக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். தொடர்ந்து, "அரசியலைப் பொறுத்தவரை, சிலர் பிஞ்சிலே பழுத்தது போல இருக்கிறார்கள். நான் மரத்திலேயே பழுத்து கனிந்தவன்" என மறைமுகமாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரைத் தாக்கிப் பேசினார். நீங்கள், தேனிக்கு புதுமுகமாக இருக்கிறீர்களே என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "நடிகனாக இருந்தால் என்னை புதுமுகம் எனலாம். அரசியலில் நான் தேனிக்குப் பழைய முகம்தான்" என்றார்.