`இனோவாவில் வந்த விலைமதிப்பற்ற சிலைகள்!'- அதிரடி காட்டிய தேர்தல் பறக்கும் படையினர் | Election flying squad seized idols in ariyalur

வெளியிடப்பட்ட நேரம்: 15:57 (25/03/2019)

கடைசி தொடர்பு:15:58 (25/03/2019)

`இனோவாவில் வந்த விலைமதிப்பற்ற சிலைகள்!'- அதிரடி காட்டிய தேர்தல் பறக்கும் படையினர்

உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட விலை மதிப்பற்ற ஏராளமான சுவாமி சிலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடராஜர் சிலை

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் கனகராஜ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தஞ்சாவூரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற இனோவா காரை மறித்து சோதனை செய்தனர். வாகனத்தில் விலைமதிப்பற்ற சுவாமி சிலைகள் 10-க்கும் மேற்பட்ட அட்டைப் பொட்டியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் காரை பறிமுதல் செய்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

சிலைகளுடன் தேர்தல் பறக்கும் படையினர்

மேலும், அட்டைப் பெட்டியிலிருந்த சிலைகளை எடுத்துப் பார்த்தபோது அதில் நடராஜர், விநாயகர், நந்தி, ஐயப்பன் உள்ளிட்ட ஏராளமான சிலைகள் உள்ளன. காரில் சிலைகளை எடுத்து வந்த பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் இனோவா கார்  ஓட்டுநரிடம் கோட்டாட்சியர் விசாரணை செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட சாமி சிலைகளில் புதிய சிலைகள் மற்றும் பழங்காலத்துச் சிலைகளும் உள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள்

மேலும், இந்தச் சிலைகள் குறித்து பல்வேறு கோணத்திலும் தற்கால சிலைகளா அல்லது பழங்காலத்துச் சிலைகளா என்பது குறித்தும் கோட்டாட்சியர் சத்திய நாராயணன் விசாரணை மேற்கொண்டுள்ளார். தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும்போது எப்படி இவர்கள் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.