`முதலில் கட்சியைப் பதிவு செய்யுங்கள்; சின்னத்தை அப்புறம் கேட்கலாம்!’ - அ.ம.மு.கவைச் சீண்டிய ராஜேந்திர பாலாஜி | Minister Rajendrabalaji slams AMMK over asking common symbol for election

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (25/03/2019)

கடைசி தொடர்பு:09:43 (26/03/2019)

`முதலில் கட்சியைப் பதிவு செய்யுங்கள்; சின்னத்தை அப்புறம் கேட்கலாம்!’ - அ.ம.மு.கவைச் சீண்டிய ராஜேந்திர பாலாஜி

``தாலியே கட்டாமல் மனைவி எனக் கூறுவது தவறு. முதலில் அ.ம.மு.க கட்சியை பதிவு செய்யட்டும். அப்புறம் தேர்தலுக்கு பொதுவான சின்னத்தைக் கேட்கலாம் என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

ராஜேந்திரபாலாஜி

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அ.சிவஞானத்திடம் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். முன்னதாக மாரியம்மன் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு நகரின் முக்கிய வீதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தே.மு.தி.க மாவட்டச் செயலர் செய்யது காஜா ஷெரீப் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதன்பின்னர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறும்போது, பதிவுபெற்ற கட்சிகளுக்குத்தான் தேர்தலில் பொதுவான சின்னம் வழங்கப்படும். இதுதான் தேர்தல் ஆணையத்தின் விதி. அ.ம.மு.க கட்சியை முதலில் பதிவு செய்யட்டும். தாலியே கட்டாமல் பொண்டாட்டி எனச் சொல்வது தவறு. முதலில் தாலி கட்டட்டும். அதுபோல அ.ம.மு.க-வைப் பதிவு செய்தபின் தங்களுக்கு வேண்டிய சின்னத்தை கேட்கட்டும். பதிவு செய்யாமல் கேட்டால் யாரும் தரமாட்டார்கள். அ.தி.மு.க-வில் உழைத்தவர்களுக்குத் தான் மரியாதை. அ.ம.மு.க வேட்பாளரில் வாரிசு கிடையாதா. அ.தி.மு.க-வை குறைசொல்வதுதான் அ.ம.மு.க-வினரின் வேலையாக உள்ளதே தவிர கட்சியை வளர்க்கும் வேலையை அவர்கள் பார்க்கவில்லை.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

முள்ளிவாய்க்கால் படுகொலையில் காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து கிராமம் கிராமமாக பேசிய வைகோவுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. இன்று காங்கிரசை ஆதரித்துப் பேசுகிறார். கமல்ஹாசனுக்கு அவரின் பலம் தெரியும். அதனால்தான் அவர் தேர்தலில் நிற்கவில்லை. தன் ரசிகர் மன்றத்தில் உள்ள யாருக்கும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. தேர்தலுக்குப் பின் எத்தனைக் கட்சிகள் காணாமல் போகும் என்பதைப் பார்க்கலாம். தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகள் மட்டும்தான் இருக்கும். மற்ற கட்சிகள் இருக்காது எனத் தெரிவித்தார்.