`என்னை வெற்றி பெறவைத்தால் இதெல்லாம் நடக்கும்!'- பாரிவேந்தர் அதிரடி அறிவிப்பு | IJK leader Parivendar files nomination in Perambalur constituency

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (25/03/2019)

கடைசி தொடர்பு:09:43 (26/03/2019)

`என்னை வெற்றி பெறவைத்தால் இதெல்லாம் நடக்கும்!'- பாரிவேந்தர் அதிரடி அறிவிப்பு

``மக்கள் தேவைகளுக்கு என்னென்ன தேவைகள் என்பதைப் புள்ளி விவரத்தோடு எடுத்து வைத்துள்ளேன். எனது சொந்தப் பணத்தைச் செலவு செய்ய உள்ளேன்" எனப் பெரம்பலூர் தொகுதியில் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்த இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் கூறினார். 

வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் பாரிவேந்தர்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகள், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கூட்டணி கட்சியினருடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் பாரிவேந்தர்

இந்த நிலையில், வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர். தி.மு.க கூட்டணியில் உள்ள ஐ.ஜே.கே கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டு நம்மிடம் பேசினார்.

``நான் பணத்துக்கு ஆசைப்பாடாதவன். என்னால் பலர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். என் மக்களையும் வாழ வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுத் தேர்தல் களத்தில் குதித்திருக்கிறேன். நான் ஒண்ணும் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு நல்லது செய்பவன் அல்ல. 2011-ம் ஆண்டு தானே புயல் பாதிக்கப்பட்டபோது கடலூர் மற்றும் பாண்டிச்சேரியில் 328 பேருக்கு ஏழரைக் கோடி கல்வி விலக்கு அளித்துள்ளேன். அதேபோல் கஜா புயலால் திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்ட 48 கோடி ரூபாய்க்குக் கல்விக் கட்டணத்தை விளக்கியுள்ளேன். அதேபோல் 60 லட்ச ரூபாய்க்கு நிவாரண உதவிகளும் தென்னை மரங்களைக் கூழாக்கி எடுத்துச்செல்ல 5 வாகனங்களையும் அனுப்பினேன். அத்தோடு குடிதண்ணீருக்குக் கையேந்தக் கூடாது என்பதற்காக 20 டேங்கர்களில் தினந்தோறும் தண்ணீரும் கொடுத்து வந்தோம்.

வேட்பு மனு தாக்கல் செய்யும் பாரிவேந்தர்

இந்தத் தொகுதியில் என்னை நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தால் இப்பகுதியில் உற்பத்தியாகும் பூக்களிலிருந்து சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலையை உருவாக்குவேன். வாழை விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு சேமிப்பு குளிர்பதனக் கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுப்பேன். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒன்று அல்லது இரண்டு சேமிப்பு இடங்களை உறுதியாக உருவாக்கித் தருவேன். மேலும், குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்கு புதிய பேருந்து நிலையம், குளித்தலை தோகமலை ரயில்வே மேம்பாலம், காவிரி குண்டாறு பாசனத் திட்டம் கட்டளை வாய்க்கால் சிறு பாலம், ஏரிக்கு உபரி நீரைக் கொண்டு செல்லுதல் என இம்மாவட்ட மக்களுக்கு என்னென்ன தேவைகள் என்பதைப் புள்ளி விவரத்தோடு எடுத்து வைத்துள்ளேன். எல்லாவற்றுக்கும் அரசுப் பணத்துக்காகக் காத்திருக்காமல் என்னுடைய சொந்தப் பணத்தை மக்களுக்காகச் செலவு செய்வேன்" என்று முடித்துக்கொண்டார்.