`8 வருடங்களுக்கு முன் வேண்டுதல்!'- ரஜினியின் பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டிய திருச்சி ரசிகர் | Trichy fan constructed mani mandapam for rajini’s parents

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (25/03/2019)

கடைசி தொடர்பு:17:30 (25/03/2019)

`8 வருடங்களுக்கு முன் வேண்டுதல்!'- ரஜினியின் பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டிய திருச்சி ரசிகர்

திரைப்பட நடிகர்களுக்குக் கோயில் கட்டி வணங்குவதில் திருச்சி ரசிகர்கள் தூள் கிளப்புவதுண்டு. கடந்த சிலவருடங்களுக்கு முன்பு, நடிகை குஷ்புவுக்கு திருச்சியில் அவரது ரசிகர்கள் கோயில் கட்டியது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், திருச்சியில் ரஜினியின் பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டி அசத்தியுள்ளார் அவரின் ரசிகர் ஸ்டாலின் புஷ்பராஜ்.
 

ரஜினியின் பெற்றோருக்கு மணிமண்டபம்

திருச்சியைச் சேர்ந்த இவர், ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்துவருகிறார். இவருக்கு சின்னவயதில் இருந்தே, ரஜினிகாந்த்தைப் பிடிக்குமாம். அந்தவகையில் ரஜினியின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், கடந்த 2011-ம் ஆண்டு ரஜினி உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றபோது, அவர் பூரண குணமடைய, அவரது ரசிகர்கள், அலகு குத்துதல், அக்னிச் சட்டி எடுத்தல், பால்குடம் தூக்கியது என பல வகையான வேண்டுதல்களைச் செய்தனர். அந்தவகையில் அப்போது ரஜினியின் உடல்நலன் பெற நினைத்த, ஸ்டாலின் புஸ்பராஜ், தலைவர் ரஜினியின் உடல் சரியானால், அவரது பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டுவதாக வேண்டினாராம். இதையடுத்து, ரஜினி பூரணக் குணமடைந்து மீண்டும் சினிமாவில் களைகட்டிவரும் நிலையில், அடுத்து அரசியல் பரபரப்பையும் உண்டாக்கத் தயாராகி உள்ளார். இந்நிலையில், தன்னுடைய வேண்டுதல்படி ஸ்டாலின் புஷ்பராஜ்,  திருச்சி விமான நிலையம் பகுதியில் உள்ள குமாரமங்கலம் எனும் பகுதியில் 35 லட்ச ரூபாய் மதிப்பில் ரஜினியின் பெற்றோரான ரானேஜிராவ் மற்றும் ராம்பாய் ஆகியோருக்கு மார்பளவு சிலை மற்றும் நிலத்துடன் கூடிய மணி மண்டபம் கட்டியுள்ளார்.

இதற்காக, `நலம் குன்றியபோது, வரம் கேட்டேன், கிடைக்கப் பெற்றேன், வேண்டுதலை நிறைவேற்றும் நாள்' அழைப்பிதழ் அச்சடித்து, ரஜினிகாந்த் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு நேரில் வைத்து அழைப்பு விடுத்தனர். ரஜினிகாந்த்தின் பெற்றோருக்கு ரசிகரால் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்டபத்தின் திறப்புவிழா இன்று காலை நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட தலைவர் கலீல், மாவட்ட துணைச் செயலாளர் ராயல்ராஜூ ஆகியோர் சகிதமாக ரஜினிகாந்த் சார்பாக அவரது அண்ணன் சத்தியநாராயணராவ் கெய்க்வாட் மற்றும் சந்திரகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு திறந்துவைத்தனர். நிகழ்ச்சியைக் காண ஏராளமான ரஜினி ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.

ரஜினியின் பெற்றோருக்கு மணிமண்டபம்

நிகழ்ச்சியின் முடிவில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணராவ், “வருகின்ற நாடாளுமன்றதேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. நல்லவர்கள் யார் எனப் பொதுமக்கள்  பார்த்து ஓட்டுப் போட வேண்டும். மேலும் விரைவில் ரஜினி திருச்சி வருவார்” என்று கூறினார்.

திருச்சியில் கட்டப்பட்டுள்ள ரஜினியின் பெற்றோருக்கான மணிமண்டபத்தைப் பார்க்க பல்வேறு தரப்பு மக்கள் சென்று வருகின்றனர்.