`பிரச்னைக்கு முன்பே உஷாரான டி.டி.வி!'- நெல்லை அ.ம.மு.க வேட்பாளர் மாற்றப்பட்ட பின்னணி | Background details about Nellai AMMK candidate change

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (25/03/2019)

கடைசி தொடர்பு:09:44 (26/03/2019)

`பிரச்னைக்கு முன்பே உஷாரான டி.டி.வி!'- நெல்லை அ.ம.மு.க வேட்பாளர் மாற்றப்பட்ட பின்னணி

நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக அ.ம.மு.க சார்பாக ஞான அருள்மணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு அவர் பிரசாரத்தைத் தொடங்கிய நிலையில், அவருக்குப் பதிலாக மைக்கேல் ராயப்பன் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 

ஞான அருள்மணிதமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை தி.மு.க மற்றும் அ.தி.மு.க  கடந்த 17-ம் தேதி அறிவித்தன. அதன்படி, நெல்லை தொகுதியில் தி.மு.க சார்பாக ஞானதிரவியம். அ.தி.மு.க சார்பாக மனோஜ் பாண்டியன் ஆகியோரது பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அன்றைய தினமே,  டி.டி.வி.தினகரன் அறிவித்த முதல் பட்டியலில் நெல்லை தொகுதியின் வேட்பாளராக ஞான அருள்மணி அறிவிக்கப்பட்டிருந்தார். 

நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவரான ஞான அருள்மணி ஜவுளி வியாபாரம் செய்து வருபவர். அ.தி.மு.க-வில் ஆரம்ப கட்டத் தொண்டனாகச் செயல்பட்ட அவர் தற்போது அ.ம.மு.க-வில் நெல்லை தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவுச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் கட்சியினருடன் இணைந்து தேர்தல் வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வந்தார். 

குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள வி.ஐ.பி-கள், சமுதாயத் தலைவர்கள், மத போதகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். அத்துடன் செயல்வீரர்கள் கூட்டத்தைக் கூட்டியும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டிவந்தார். இந்த நிலையில், அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்ட  அறிக்கையில், ’நெல்லை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக ஞான அருள்மணிக்குப் பதிலாக ஜெ.பேரவை இணைச் செயலாளரான மைக்கேல் ராயப்பன் அறிவிக்கப்படுகிறார்' எனக் குறிப்பிட்டுள்ளார். 

ஏற்கெனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஞான அருள்மணி கடந்த ஒரு வார காலமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீரென அவர் மாற்றப்படக் காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஞான அருள்மணிக்கு இலங்கையில் தொழில்கள் அதிகம் இருக்கின்றன. 

தொழில் ரீதியாக இலங்கைக்கு அடிக்கடி சென்று வந்துகொண்டிருந்த அவருக்கு அங்கு குடியுரிமையும் கிடைத்துள்ளது. அவர் வேட்புமனு தாக்கல் செய்தபிறகு வேட்புமனு பரிசீலனையின்போது இந்த விவகாரத்தைக் கிளப்ப அ.தி.மு.க மற்றும் தி.மு.க தரப்பு தயாராக இருந்தது. இதை அறிந்ததால் அவருக்குப் பதிலாக மைக்கேல் ராயப்பனை களமிறக்க டி.டி.வி.தினகரன் முடிவு செய்துள்ளார். 

மைக்கேல் ராயப்பன்

மைக்கேல் ராயப்பனை பொறுத்தவரையிலும், இந்தத் தொகுதிக்கு அறிமுகமானவர். ஏற்கெனவே தே.மு.தி.க சார்பாகக் கடந்த தேர்தலின்போது போட்டியிட்டார். அதனால் தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகம் ஆனவர். அத்துடன், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டவர். ஆகவே, அவருக்கு சீட் வழங்கப்படும் என நினைத்திருந்த நிலையில், ஞான அருள்மணிக்கு வழங்கப்பட்டிருந்தது. தற்போது மைக்கேல் ராயப்பன் பெயர் அறிவிக்கப்பட்ட விவகாரத்தால் அ.ம.மு.க-வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.