`கோவை எஸ்.பி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கோம்!'- பொள்ளாச்சி விவகாரத்தில் தமிழக அரசு தகவல் | action against kovai dsp in pollachi issue

வெளியிடப்பட்ட நேரம்: 16:57 (25/03/2019)

கடைசி தொடர்பு:16:57 (25/03/2019)

`கோவை எஸ்.பி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கோம்!'- பொள்ளாச்சி விவகாரத்தில் தமிழக அரசு தகவல்

பொள்ளாச்சி விவகாரத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

பொள்ளாச்சி குற்றவாளிகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு காவலில் உள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் மீதும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்து அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு. அந்த அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், கல்லூரி உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டன. இந்த சம்பவம் ஒருபுறம் இருக்க பாலியல் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன். 

பாண்டியராஜன்

இது சர்ச்சையை ஏற்படுத்தப் பல தரப்பிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டது சட்டப்படி குற்றம் என்பதால், இது தொடர்பாக சூரியபிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு  சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்தது. அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார் என அரசு தெரிவித்ததையடுத்து இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது. ஏற்கெனவே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்ட நிலையில் இந்தத் தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க