`பெரம்பலூர் பிறந்த வீடு; நீலகிரி புகுந்த வீடு!'-தொண்டர்களை குஷிப்படுத்திய ஆ.ராசா | Nilgiris constituency DMK Candidate A.Raja files nomination

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (25/03/2019)

கடைசி தொடர்பு:18:00 (25/03/2019)

`பெரம்பலூர் பிறந்த வீடு; நீலகிரி புகுந்த வீடு!'-தொண்டர்களை குஷிப்படுத்திய ஆ.ராசா

நீலகிரி (தனி) தொகுதியில் தி.மு.க.சார்பில் போட்டியிட ஆ.ராசா இன்று கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து  வேட்பு மனுத்தாக்கல் செய்தார். 

நீலகிரி கலெக்டரிடம் வேட்பு மனு தாக்கல் செய்யும் ராசா

ஏழாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மூன்றாவது முறையாக நீலகிரி தொகுதியில் களம் காண்கிறார். இரண்டு முறை நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு ஒரு முறை வெற்றியையும் ஒருமுறை தோல்வியைக் கண்டுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். கடந்த தேர்தலில் ராசா வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் 2ஜி வழக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தித் தந்ததாக கட்சியினரே தெரிவிக்கின்றனர். தற்போது 2ஜி வழக்கில் இருந்து விடுதலையாகி  புது உத்வேகத்துடன் களமிறங்கியுள்ளார். தி.மு.க சார்பில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக ஊட்டி கமர்சியல் சாலையிலிருந்து தி.மு.க மற்றும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருடன் ஊர்வலமாக வந்தார். அப்போது தொண்டர்களிடம் பேசிய ராசா, நான் நீலகிரி தொகுதிக்கு புதியவன் அல்ல. எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள் பெரம்பலூரை விட்டு ஏன் நீலகிரிக்கு வந்தீர்கள் என்று. பெரம்பலூர் எனக்குப் பிறந்த வீடு நீலகிரி எனக்கு புகுந்த வீடு அதுதான் மூன்றாவது முறையாக 350 கி.மீட்டர் தொலைவு கடந்து உங்களைத் தேடி வந்துள்ளேன்'' என்றார். பேசி முடித்ததும் மகிழ்ச்சியில் தொண்டர்கள் விசில் அடித்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் ராசா

மேலும், `இந்தத் தேர்தல் தற்போது மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுகின்ற அரசை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல்' என்றார். பின்னர் கலெக்டர் அலுவலகம் வந்த ராசா மாவட்டச் செயலாளர் முபாரக், முன்னாள் மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், காங்கிரஸ் ஊட்டி எம்.எல்.ஏ கணேசன் ஆகியோருடன் இணைந்து வேட்பு மனுத் தாக்கல் செய்தார். கடந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் ராசாவுக்கு பெரிய ஆதரவு எதுவும் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தி.மு.க-வினரிடம் உண்டு. ஆனால், இந்தத் தேர்தலில் ராசாவே வியக்கும் வகையில் கூட்டணிக் கட்சியினர் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. நேரடிப் போட்டியில் களம் காண்கின்றன.