20 பெண் வேட்பாளர்கள் குறித்து மருத்துவர் ஷாலினி பதிவு! - எதிர்வினை காட்டிய நாம் தமிழர் கட்சி | nam tamiliar party members reaction due to doctor shalini's post

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (25/03/2019)

கடைசி தொடர்பு:09:45 (26/03/2019)

20 பெண் வேட்பாளர்கள் குறித்து மருத்துவர் ஷாலினி பதிவு! - எதிர்வினை காட்டிய நாம் தமிழர் கட்சி

ஷாலினி

நாம் தமிழர் கட்சி, நாடாளுமன்றத் தேர்தலில் 20 பெண் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் அரசியலை விரும்பாத பலரும், இந்த அணுகுமுறையைப் பாராட்டி சமூக வலைதளத்தில் கருத்துகளைப் பதிந்துவருகின்றனர். சிலர் மாறுபட்ட கருத்துகளையும் பதிகின்றனர். இந்த நிலையில் மருத்துவர் ஷாலினி, முகநூல் பதிவு கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

நாம் தமிழர் கட்சி அறிவித்திருக்கும் பெண் வேட்பாளர்களின் படங்களைப் பகிர்ந்துகொண்டு 'ரசிக்கும்படியாக பேசும் ஆண்களின் பின்னால் பெண்கள் போவது மானுடத்தின் சோகம்' என்று பதிவிட்டிருந்தார். 

பதிவிட்ட சில மணிநேரத்திலேயே நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் கடும் எதிர்வினையாற்றத் தொடங்கிவிட்டனர். ‪#‎Shameonyoushalini‬ எனும் ஹேஷ்டேக்கில் தங்களின் எதிர்வினைகளைப் பதிவேற்றி வருகின்றனர். மேலும், அந்தக் கட்சியின் இணையதளப் பாசறையிலிருந்து பதிந்திருக்கும் செய்தியில் கீழ்க்கண்டவாறு இருக்கிறது. 

தமிழ் பெண்களை இழிவுப்படுத்திய மனநல மருத்துவர்  Shalini பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் சட்டரீதியாக இந்தப் பிரச்னையைக் கொண்டு செல்வோம். இதுபோன்ற கீழ்த்தரமான சிந்தனைகளை சகித்துக்கொள்ள முடியாது. - நாம் தமிழர் இணையதளப் பாசறை. 

ஷாலினி

தன் பதிவுக்கு எதிராக எழுதிக்கொண்டிருப்பவர்களுக்குப் பதிலாக, தான் சொன்னதைத் தவறாகப் புரிந்துகொண்டதாக, இன்னொரு பதிவையும் பதிந்துள்ளார் மருத்துவர் ஷாலினி. 

தன் முகநூல் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள எழுத்தாளர் மாலதி மைத்ரி, ” குரங்கு தன் குட்டியை விட்டுதான் ஆழம் பார்க்கும். நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளில் பெண்களுக்கு 50% பங்களிப்பு இல்லை. ஆனால் 50% பெண் வேட்பாளர் அறிவிப்பு ஆழம் பார்க்கும் அரசியல்.....” என்று குறிப்பிட்டுள்ளார்.  

அதன் பிறகும் இந்த சர்ச்சை அடங்கியதாகத் தெரியவில்லை.  #ShameonyouShalini எனும் தலைப்பில் சமூக ஊடகங்களில் அவர் மீதான எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர்.