``ராதாரவிக்குத் தடை போடுவது சரி, அங்கே கைதட்டி சிரிச்சவங்களுக்கு..?!''- லட்சுமி ராமகிருஷ்ணன் | Actor Lakshmy ramakrishnan tells her view for Actor Radharavi controversy speech!

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (25/03/2019)

கடைசி தொடர்பு:18:20 (25/03/2019)

``ராதாரவிக்குத் தடை போடுவது சரி, அங்கே கைதட்டி சிரிச்சவங்களுக்கு..?!''- லட்சுமி ராமகிருஷ்ணன்

லட்சுமி ராமகிருஷ்ணன்


சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கும் `கொலையுதிர் காலம்'. படத்தின் டிரெய்லர் கடந்த சனிக்கிழமை வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் நடிகர் ராதாரவியும் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பிவருகிறது.  `பேயாகவும், சீதையாகவும் நயன்தாரா நடிக்கிறார்' என்று தொடங்கி அவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ராதாரவி பேசியதால் தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

மேலும், நயன்தாரா தரப்பில் ராதாரவியை விசாரிக்க தனிக்குழு அமைக்குமாறும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இப்படி, விக்னேஷ் சிவன், விஷால் தொடங்கி லட்சுமி ராமகிருஷ்ணன் எனப் பல சினிமாத் துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பில் இருந்தும் ராதாரவியின் பேச்சுக்கு மிகப்பெரும் எதிர்ப்பும், கண்டனங்களும் வந்தவண்ணம் உள்ளன. இது குறித்து, லட்சுமி ராமகிருஷ்ணனும் தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பல்வேறு துறை பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இது குறித்து அவரிடம் பேசியபோது, ``இதைவிடப் பெரிய விஷயம் ஒன்று இருக்கிறது. ராதாரவியாவது அவரது மனதில் பட்டதைப் பேசிவிடுகிறார். ஆனால், இதுபோன்ற விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு எத்தனை பேர் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் தெரியுமா. இவைதானே பொள்ளாச்சிப் போன்ற எல்லா இடத்திலும் வெளிப்படுகிறது. அவர் பேசினது தப்பான விஷயம். ஆனால் அந்த தப்பான விஷயம் தானே நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு நாம் என்னப் பண்ணப் போறோம். 

லட்சுமி ராமகிருஷ்ணன்

ஒரு பெண்ணாக நயன்தாரா சூப்பர் ஸ்டார் பதவிக்கு வருவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டாங்க. சாதிக்க வேண்டும் என வரக்கூடியப் பெண்களும் அவரை வைத்து இப்படியொரு தவறான வழிகாட்டுதலையா நாம் செய்ய வேண்டும். சினிமாத் துறையில் எத்தனை பேர் பாதியிலேயே காணாமல் போயிடுறாங்க. ராதாரவியைத் தடைப் பண்ணினால் மட்டும் பிரயோஜனம் இல்லை. அங்கே இருந்தப் பெண்களே கைதட்டி சிரிக்கிறார்களே அவங்களுக்கு எப்போது தடைப் போடப் போறீங்க. அவங்க ரசித்து சிரிச்சிட்டுத்தானே இருக்கிறார்கள். இதற்கு முன்பு பொள்ளாச்சி விவகாரத்தை எப்படி சென்ஸே இல்லாமல் பேசினார் ராதாரவி. அதையெல்லாம் எப்படி நம்மால் தாண்டிப் போக முடியும். 

இந்த விஷயங்கள் மாறுவதற்குப் பெண்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும்.  பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் பெண்களை மதிக்கத் தகுந்தவர்களாக நடத்தக் கண்டிப்பாக பெண்கள் வெளிவர வேண்டும். ஆண்கள் எப்படி காரணமாக இருக்கிறார்களோ அதேபோல சில பெண்களும் இந்தப் பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கிறார்கள். அதனால் முழுக்க முழுக்க ஆண்களையே குற்றம்சாட்ட வேண்டியதில்லை என நினைக்கிறேன். எதையும் சமாதானப்படுத்திக் கொள்ளாதீர்கள். பெண்களை கீழ்த்தரமாக காண்பிக்கும் எந்த விஷயங்களிலும் பங்கு பெறாதீர்கள். பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைக்கும், இப்போது  நடக்கும் விஷயத்துக்கும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்' என்றார் லட்சுமி ராமகிருஷ்ணன். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க