ஸ்டாலின் ஏன் நடவடிக்கை எடுத்தார் தெரியுமா?- நயன்தாரா விவகாரத்தை கிளப்பிய ஜெயக்குமார் | jayakumar slams stalin

வெளியிடப்பட்ட நேரம்: 18:06 (25/03/2019)

கடைசி தொடர்பு:18:06 (25/03/2019)

ஸ்டாலின் ஏன் நடவடிக்கை எடுத்தார் தெரியுமா?- நயன்தாரா விவகாரத்தை கிளப்பிய ஜெயக்குமார்

``தி.மு.வி-லிருந்து ராதாரவியை நீக்கியது பெண்மையை போற்றும் செயலில்லை. அப்படியிருந்தால் ஏன் சின்மயி குற்றச்சாட்டில் ராதாரவி மீது ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை. இது அரசியல் ஸ்டண்ட்''  என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

ஜெயக்குமார்

சென்னை பெரம்பூர் சர்மா நகரில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை அ.தி.மு.க வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ் ராஜேஷ் தாக்கல் செய்தார். அவர் தனது வேட்புமனுவை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கருணாகரனிடம் அளித்தார். வேட்புமனு அளிக்க ஆர்.எஸ் ராஜேஷுடன் அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார், அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன், தே.மு.தி.க வட சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர் தனபால் ஆகியோர் சென்றனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ``அ.தி.மு.க சார்பில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ராஜேஷ் நிச்சயம் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் அவர் அளித்த நலத்திட்டங்கள் அனைத்தையும் பெற்றுள்ள இந்தத் தொகுதி மக்கள், அதை மறக்காமல் அ.தி.மு.க அரசை தலைநிமிரச் செய்வார்கள். ஸ்டாலின் நிலையில்லாத மனநிலையில் உள்ளார். அவர் தனது தந்தையின் கொள்கைகளைக் கூறாமல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரைக் கூறி ஓட்டு கேட்பது வேடிக்கையாக உள்ளது. வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு என அ.தி.மு.க அரசு மீது அவதூறு பரப்பும் ஸ்டாலின் மீது நிச்சயமாக வழக்கு தொடுக்கப்படும். இப்போது நயன்தாரா விவகாரத்தில் ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த ஸ்டாலின், அப்போது ராதாரவி மீதான சின்மயியின் குற்றச் சாட்டுக்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.  இதில் பெண்மையைப் போற்றும் விஷயம் ஒன்றும் இல்லை என இது ஸ்டாலின் செய்யும் அரசியல் ஸ்டண்ட் மட்டுமே எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.