`வேலூர் மட்டுமில்ல 40 தொகுதிகளிலும் நாங்க தான்...!’ - துரைமுருகன் நம்பிக்கை | DMK alliance will win 40 constituencies, hopes Durai murugan

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (25/03/2019)

கடைசி தொடர்பு:09:46 (26/03/2019)

`வேலூர் மட்டுமில்ல 40 தொகுதிகளிலும் நாங்க தான்...!’ - துரைமுருகன் நம்பிக்கை

``வேலூர் உட்பட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், நாங்கள்தான் வெற்றிபெறுவோம்'' என்று தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

கலெக்டர் ராமனிடம் வேட்புமனு தாக்கல் செய்த துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்தும், அரக்கோணம் தொகுதியில் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகனும் போட்டியிடுகிறார்கள். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக இருவரும் தொண்டர்களுடன் பேரணியாக வந்தனர். இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வேட்பாளர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்ற, வேலூர் தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திகேயனை போலீஸார் தடுத்துநிறுத்தினர். எம்.எல்.ஏ-வுக்கு ஆதரவாக தி.மு.க-வினர், போலீஸாருடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்த ஜெக்த்ரட்சகன்.

இதையடுத்து, வேலூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த், கலெக்டர் ராமனிடம் தாக்கல் செய்தார். அதேபோல், அரக்கோணம் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடம், ஜெகத்ரட்சகன் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ‘‘வேலூர், அரக்கோணம் மட்டுமின்றி 40 தொகுதிகளிலும் தி.மு.க தான் வெற்றிபெறும்’’ என்றார். அவரின் மகன் கதிர்ஆனந்த் பேசுகையில், ‘‘நான் வெற்றிபெற்றால் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவருவேன். வேலூர் மக்களுக்காக நிறைய செய்வேன்’’ என்று தெரிவித்தார்.