`பி.ஜே.பியை ஆதரிப்பதாக தவறான தகவல் பரப்புகிறார்கள்!’ - மு.க.அழகிரி காட்டம் | I'm not supporting any party, explains MK Alagiri

வெளியிடப்பட்ட நேரம்: 19:41 (25/03/2019)

கடைசி தொடர்பு:09:48 (26/03/2019)

`பி.ஜே.பியை ஆதரிப்பதாக தவறான தகவல் பரப்புகிறார்கள்!’ - மு.க.அழகிரி காட்டம்

``நான் பிஜேபியை ஆதரிப்பதாக கூறுவது தவறான தகவல். நான் யாரையும் ஆதரிப்பதாகக் கூறவில்லை. இன்னும் சில நாள்களில் என் நிலைப்பாட்டை தெரிவிப்பேன்'' என்று நம்மிடம் கூறினார் மு.க.அழகிரி. 

இன்று காலை மதுரையிலுள்ள தன் வீட்டில் ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார் அழகிரி. அப்போது யாருக்கு ஆதரவு என்பதை விரைவில் அறிவிப்பேன். அப்படி இல்லையென்றால் உங்களுக்குப் பிடித்தவர்களுக்கு வாக்களியுங்கள்'' என்று கூறியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் பற்றி பலரும் பலவிதமாக வதந்திகளை சமூக ஊடகங்களில் பரப்பத் தொடங்கிவிட்டார்கள். பி.ஜே.பி-யின் ஹெச்.ராஜாவுக்கு ஆதரவு தெரிவித்ததாக 2014-ல் ஆதரவு கொடுத்த போட்டோவை இப்போது சந்தித்ததுபோல பரப்பினார்கள். 

மு.க.அழகிரி

இந்த நிலையில், பி.ஜே.பிக்கு ஆதரவு தெரிவித்தது உண்மையா என்பது குறித்து அழகிரியைத் தொடர்புகொண்டு கேட்டதற்கு,``நான் பி.ஜே.பிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பழைய போட்டோவை சிலர் பரப்பி வருகிறார்கள். நான் அப்படி யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை. என்னை யாரும் தேடி வரவில்லை’’ என்றார். 

`தேர்தல் நெருங்கி வந்துவிட்டது, உங்களுடைய அரசியல் நிலைப்பாடுதான் என்ன? என்று நாம் கேட்டோம். அதற்கு, ``இப்போதைக்கு எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை. எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை. தி.மு.கவைப் பற்றி நான் முன்பு சொன்னதுதான்'' என்று பதிலளித்தார்.

`கலைஞருக்கு அமைதி ஊர்வலம் சென்னையில் நடத்திய பின் தனி அமைப்போ கட்சியோ தொடங்கப்போவதாக தங்கள் ஆதரவாளர்கள் கூறினார்கள். அது என்னாச்சு?’ என்று கேட்டதற்கு, ``அதுக்கு இப்ப என்ன அவசரம், இன்னும் நாள் இருக்கு, விரைவில் அதைப்பற்றி தெரிவிப்பேன். இப்போதைக்கு இது போதும்'' என்று முடித்துக்கொண்டார். ஆதரவாளர்கள் தேர்தலுக்கு முன் ஏதாவது முடிவு எடுங்கள் என்று அழகிரியை நச்சரித்து வருகிறார்களாம். அதைப்பற்றி இப்போது யோசித்து வருகிறார் என்று சொல்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க