கார்டுலெஸ் மைக்-குக்கு மாறிய எடப்பாடி பழனிசாமி! - சென்னையில் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு | Edappadi palaniswami slams stalin

வெளியிடப்பட்ட நேரம்: 20:08 (25/03/2019)

கடைசி தொடர்பு:09:48 (26/03/2019)

கார்டுலெஸ் மைக்-குக்கு மாறிய எடப்பாடி பழனிசாமி! - சென்னையில் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

`நாடு பாதுகாப்பாக இருக்க, வலிமையான பிரதமராக இருக்கும் மோடி மீண்டும் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும்'' என எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் பேசினார்.

எடப்பாடி

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கைகள் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்ததால், களத்தில் இறங்கி வேட்பாளர்களை ஆதரித்து பேசிவருகின்றனர். இரண்டு கட்சிகளும், கடந்தகால ஆட்சிகள் குறித்து மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றன. அந்த வகையில் சென்னையில் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, கன் மைக்கை தவிர்த்து முதல் முதலாக கார்ட்லஸ் மைக்கைப் பயன்படுத்தி பிரசாரம் செய்தார்.

முதல்வர் பழனிசாமி

இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அ.தி.மு.க கூட்டணியில் வடசென்னை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து ராயபுரம், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், `மருத்துவத்துறையில் தமிழகம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டு வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாடு பாதுகாப்பாக இருக்க மீண்டும் மோடி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும்.தகுதி வாய்ந்த பிரதமர் நமது நரேந்திர மோடி. நம் நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல், அண்டை நாடுகள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து சதி செயல்களை செய்வதை பார்த்திருக்கிறோம் அப்படிப்பட்ட தீவிரவாதிகளை வேரோடு, கூண்டோடு அழிக்கக்கூடிய சக்தி பிரதமர் நரேந்திர மோடிக்குத்தான் இருக்கிறது. எனவே நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதற்காகவே இத்தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி வைத்துள்ளது. தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி 15 ஆண்டுகளில் என்ன சாதனை செய்தது?. பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் ஏழைமக்களுக்கு 16 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்'' என்று அவர் பேசினார்.