`தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன!’ - தலைமைச் செயலக அரசு ஊழியர்கள் சங்கம் | Tamilnadu secretariat employees association urges EC over election duty

வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (25/03/2019)

கடைசி தொடர்பு:20:50 (25/03/2019)

`தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன!’ - தலைமைச் செயலக அரசு ஊழியர்கள் சங்கம்

தேர்தல்

 நாடாளுமன்றத் தேர்தல் வரும் 18-ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை முழுவீச்சில் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக அரசு ஊழியர்களுக்குத் தேர்தல் பணிகளை ஒதுக்கும் நடைமுறை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகள் அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலக அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.

பீட்டர்  தலைமைச் செயலக   அரசு ஊழியர்கள் சங்கம்

இதுகுறித்து தலைமைச் செயலக அரசு  ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் பீட்டர் பேசுகையில், ``அரசுப் பணியில் 12 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். தேர்தல் பணிகளை கவனிப்பதற்கான கடிதம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எத்தனை பேர் இடம் பெறுவார்கள்  என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையில் பல்வேறு சிக்கல் உள்ளன. குறிப்பாக மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோரையும் தேர்தல் பணிக்கு ஈடுபடுத்த உள்ளனர். அவர்களால் எப்படி இந்த வேலையைச் செய்ய முடியும். இதெல்லாம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு தெரியாதா?. 

மேலும், அப்படியே பணியில் அவர்களை ஈடுபடுத்தினாலும் அவர்களுக்கு வழங்க வேண்டிய உணவு, குடிநீர், தங்கும் வசதி, கழிப்பிட வசதி இவையெல்லாம் சரிவர வழங்குவதில்லை. குறிப்பாக அரசு ஊழியர்களுக்குக் கிடைக்க வேண்டிய தபால் ஓட்டுமுறை முழுமையாகக் கிடைப்பதில்லை. அரசு ஊழியர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அந்தந்த ஊழியர்களுக்குத் தேர்தல் பணி அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ளோம். எங்களுடைய இந்தக் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக சத்ய பிரதா சாகு உறுதி அளித்துள்ளார்' என்றார்.