நெற்றியில் விபூதியோடு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த தஞ்சை தொகுதி தி.மு.க வேட்பாளர்! | Tanjore DMK candidate Palanimanickam files nomination today

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (25/03/2019)

கடைசி தொடர்பு:09:49 (26/03/2019)

நெற்றியில் விபூதியோடு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த தஞ்சை தொகுதி தி.மு.க வேட்பாளர்!

காவிரி டெல்டா பகுதியை ஒட்டுமொத்தமாக சூறையாட மத்திய அரசு தயாராகி உள்ளது. மக்களையும், மண்ணையும் மலடாக்க நினைக்கும் பா.ஜ.க., அ.தி.மு.க அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர். தஞ்சையில் விமானப்படை தளத்திலிருந்து பயணிகள் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பழநிமாணிக்கம் தெரிவித்தார்.

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு வேட்பாளராக போட்டியிடும் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். முன்னதாக பழையபேருந்து நிலையத்தில் உள்ள பெரியார், அண்ணா சிலைக்கு மதியம் 12 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதாகக் கூறப்பட்டிருந்தது. இதற்காக காலை 10.30 மணிக்கெல்லாம் தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சி  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரள ஆரம்பித்தனர். கடும் வெயில் சுட்டெரித்தது.  இதனால் தொண்டர்கள் சோர்வடைய ஆரம்பித்தனர். ஒரு வழியாக மணி பன்னிரண்டை நெருங்கியது. ஆனால், வேட்பாளர் வரவில்லை. `எப்ப வேட்பாளர் வருவார்?’ என ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டே இருந்தனர்.

சுமார் 12.50 மணிக்கு பழநிமாணிக்கம், தேர்தல் பொறுப்பாளர் செல்வகணபதி, சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் நீலமேகம், தெற்கு மாவட்டச் செயலாளர் சந்திரசேகர், மன்னார்குடி எம்.எல்.ஏ  டி.ஆர்.பி ராஜா மற்றும் நிர்வாகிகள் பலர் வந்தனர். முதலில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் செல்வகணபதி, `தலைவர் ஸ்டாலின் வாழ்க, நமது சின்னம் உதயசூரியன்' என கோஷமிட்டார். அவரைத் தொடர்ந்து தொண்டர்களும் கோஷமிட்டனர். அப்போது உங்கள் வேட்பாளர் எனக் கோஷமிட்ட தொண்டர்கள் மரியாதை நிமித்தமாக பழநிமாணிக்கத்தின் பெயரைச் சொல்லி கோஷமிடவில்லை. இதனால் வேட்பாளரே உங்கள் வேட்பாளர், உதயசூரியன் என கோஷமிட்டு கூட்டத்தைக் கலகலப்பாக்கினார்.

பின்னர் எதிரே இருந்த பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள், ``அண்ணன் பழநிமாணிக்கம் நெற்றியில் விபூதி வைத்துக்கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்திருக்கிறார். இதை அண்ணன் கவனத்தில் கொள்ள மறந்துவிட்டார்போல. அதோடு தந்தை பெரியார் புகழ் ஓங்குக என்றும் கோஷமிடுகிறார். அண்ணன் நெற்றியில் விபூதியோடு வலம் வர மாட்டாரே’’ என சலசலப்புடன் பேசிக்கொண்டனர். பின்னர் வேட்பாளர் உட்பட அனைவரும் தஞ்சை கலெக்டர் அலுவலகம் வந்தனர். பிறகு தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட பழநிமாணிக்கம் மாவட்டத் தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான அண்ணாதுரையிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். தி.மு.க மாற்று வேட்பாளராக முன்னாள் அரசு வக்கீல் நமச்சிவாயம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

இதன்பின்னர் பழநிமாணிக்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``நான் வெற்றி பெறுவது உறுதி. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வருகைக்குப் பின்னர் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காவிரி டெல்டா பகுதியை ஒட்டுமொத்தமாக சூறையாட மத்திய அரசு தயாராகி உள்ளது. மக்களையும், மண்ணையும் மலடாக்க நினைக்கும் பா.ஜ.க., அ.தி.மு.க அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர். நான் வெற்றி பெற்றால், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு நீண்டகால கடன்கள் வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற நடவடிக்கை எடுப்பேன். ஒரத்தநாட்டில் கலைக்கல்லூரி மட்டும் உள்ளது. அங்கு மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி ஆகியவற்றை தொடங்கி மகளிர் பல்லைக்கழகமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன்.

தஞ்சையிலிருந்து புதிய ரயில் மற்றும் தற்போது இயங்கும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை எடுப்பேன். காவிரி டெல்டா பகுதியில் உள்ள ஆறு, ஏரி, குளங்களைத் தூர்வாரி தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சையில் உள்ள இந்திய  உணவுப் பதன தொழில்நுட்பக் கழகத்தை உலகத்தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சையில் விமான படைத் தளம் உள்ளது. பயணிகள் செல்வதற்கு வசதியாக மாற்றம் செய்து தஞ்சையிலிருந்து விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள் எதிர்க்கும் சாகர் மாலா திட்டம், மீத்தேன் திட்டம் போன்ற திட்டங்களைக் கைவிட்டு, மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மேலும் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை தஞ்சையில் ஏற்படுத்தப்படும். கல்லணைக் கால்வாய் புனரமைப்பு செய்யும் திட்டம் பாதியில் உள்ளது. அது மீண்டும் புனரமைப்பு செய்யும் பணி தொடங்கப்படும்’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க