`திகார் சிறை எங்கே இருக்கிறது என எனக்குத் தெரியாது; நான் நேர்மையான வேட்பாளர்!’ - உருகிய தமிழிசை | Thoothukudi BJP candidate Tamilisai files nomination today

வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (25/03/2019)

கடைசி தொடர்பு:09:50 (26/03/2019)

`திகார் சிறை எங்கே இருக்கிறது என எனக்குத் தெரியாது; நான் நேர்மையான வேட்பாளர்!’ - உருகிய தமிழிசை

``திகார் சிறை எங்கு இருக்கிறது என எனக்குத் தெரியாது. நான் எந்தக் குற்றச்சாட்டும் இல்லாத நேர்மையான வேட்பாளர். நான் வெற்றி பெற்றால், தூத்துக்குடியைத் தூய்மையான தூத்துக்குடியாக மாற்றுவேன்” என பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் அ.தி.மு.க கூட்டணிக் கட்சியான பா.ஜ.க வேட்பாளரான தமிழிசை செளந்தரராஜன், மாவட்டத் தேர்தல் அதிகாரியான சந்தீப் நந்தூரியிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் கூடினர். சரியாக 12.35 மணிக்கு கையில் தாமரைப் பூவை உயர்த்திக் காட்டியபடியே ஆட்சியர் அலுவலகப் பகுதியில் பிரசார வேனில் வந்தார் தமிழிசை. தொடர்ந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். பின்னர், வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்டார் தமிழிசை.

அதில் பேசிய அவர், “நான் எந்தக் குற்றச்சாட்டும் இல்லாத நேர்மையான வேட்பாளர். இத்தனை வருட எனது அரசியல் வாழ்க்கையில் என் மீது எந்தவிதக் குற்றச்சாட்டும் கிடையாது. எனக்குத் திகார் சிறை எங்கு இருக்கிறது என்பது தெரியாது. திகார் சிறை இருக்கும் இடம் சிலருக்கு மட்டும்தான் தெரியும். தி.மு.க என்றால் திராவிட முன்னேற்றக் கழகமா அல்லது திகார் முன்னேற்றக் கழகமா எனக் கேட்கும் அளவுக்கு ஒரு காலத்தில் இருந்தது தி.மு.க-தான்.

என் மகளின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்கச் சென்றபோதே, “உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்” எனச் சொன்னவர் அவர். ஜெயலலிதாவுக்குப் பிடித்த என்னை, தூத்துக்குடி மக்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். எனது திருமணத்தை நடத்தி வைத்தவர் எம்.ஜி.ஆர்-தான். “மருத்துவராக இருக்கும் தமிழிசை, எதிர்காலத்தில் சமுதாயத்தில் சிறந்த தலைவியாக வருவார்” என என்னைப் பாராட்டிப் பேசினார் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க-வுடன் தற்போது கூட்டணி வைத்திருந்தாலும், அப்போதே ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் பாராட்டுக் கூட்டணியில் இணைந்துவிட்டேன்.

இன்று வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன்பு கூடிய தொண்டர்கள் கூட்டத்தைப் பார்த்து மற்ற கட்சியினர் பயந்து, மிரண்டு போயுள்ளனர். சூரியன் மறைந்துகொண்டிருக்கிறது. தாமரை மலர்ந்துகொண்டிருக்கிறது. நான் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால், தூத்துக்குடியைத் தூய்மையான தூத்துக்குடியாக மாற்றுவேன்” என்றார்.

தமிழிசை வேட்புமனுத்தாக்கல் செய்த பின், ஆட்சியர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தி.மு.க வேட்பாளரான கனிமொழி தன் ஆதரவாளர்களுடன் ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்தார். தமிழிசையும் கனிமொழியும் எதிரெதிராகச் சந்தித்திருந்தால் இருவரும் மரியாதை நிமித்தமான பரஸ்பர வணக்கம் தெரிவிப்பார்கள். இதைச் செய்தியாக்கலாம் என மீடியாக்களும் நினைத்தன. ஆனால், செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் தமிழிசையைச் சூழ்ந்து நின்றுகொண்டிருந்ததால், தமிழிசை நிற்பது வெளியே தெரியாததால் கூட்டத்தைக் கடந்து வேட்புமனுத்தாக்கல் செய்ய ஆட்சியர் அறை நோக்கிச் சென்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க