கன்னியாகுமரி தொகுதியில் மூன்று கோடீஸ்வர வேட்பாளர்கள் - முதலிடத்தில் வசந்தகுமார்! | H.Vasanthakumar had highest numbers of assert

வெளியிடப்பட்ட நேரம்: 22:07 (25/03/2019)

கடைசி தொடர்பு:22:10 (25/03/2019)

கன்னியாகுமரி தொகுதியில் மூன்று கோடீஸ்வர வேட்பாளர்கள் - முதலிடத்தில் வசந்தகுமார்!

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை வேட்புமனுத் தாக்கல் செய்த வேட்பாளர்களில் காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதில் ஹெச்.வசந்தகுமார் 417.49 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முன்னிலையில் உள்ளார்.

ஹெச்.வசந்தகுமார்


கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் ஹெச்.வசந்தகுமார், மக்கள் நீதி மய்யம் சார்பில் எபினேசர் ஆகியோர் இதுவரை வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு 6,99,40,115 ரூபாய் சொத்து மதிப்பு உள்ளதாக கணக்கு காட்டியுள்ளார். மக்கள் நீதி மய்ய வேட்பாளர் எபினேசர் 2 கோடி ரூபாய் சொத்து மதிப்பு உள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

இன்று வேட்புமனுத் தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில்  417,49,30,444 ரூபாய்  சொத்து மதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 154,75,11,439 ரூபாய் வங்கிக்கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த 2014- ம் ஆண்டு வேட்புமனுத் தாக்கலின்போது 3,99,70,283 ரூபாய் எனக் குறிப்பிட்டிருந்தார்.

எபினேசர்

ஹெச்.வசந்தகுமார் கடந்த 2016 நாங்குநேரி சட்டசபைத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்தபோது தனது சொத்துமதிப்பு 337,26,86,707 ரூபாய் சொத்துமதிப்பு கணக்கு காட்டியிருந்தார். மேலும், 122,53,00,000 ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ரூ.283 கோடி சொத்துமதிப்பு இருப்பதாக ஹெச்.வசந்தகுமார் குறிப்பிட்டிருந்தார். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த வேட்பாளர்களில் கோடீஸ்வரர் லிஸ்டில் ஹெச்.வசந்தகுமார் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.