`வேறு யாரும் செய்யாத வளர்ச்சிப் பணிகளைச் செய்துள்ளேன்!’ - வேட்புமனுத்தாக்கல் செய்த பொள்ளாச்சி எம்.பி | Pollachi ADMK candidate Mahendran files nomination

வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (25/03/2019)

கடைசி தொடர்பு:09:50 (26/03/2019)

`வேறு யாரும் செய்யாத வளர்ச்சிப் பணிகளைச் செய்துள்ளேன்!’ - வேட்புமனுத்தாக்கல் செய்த பொள்ளாச்சி எம்.பி

பொள்ளாச்சி தொகுதியில் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று அ.தி.மு.க வேட்பாளர் சி.மகேந்திரன் கூறியுள்ளார்.

மகேந்திரன்

பொள்ளாச்சி பாராளுமன்றத் தொகுதியில் தி.மு.க, அ.தி.மு.க நேரடியாக மோதுகின்றன. அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.பி மகேந்திரனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க-வில் சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார். பொள்ளாச்சி பாலியல் விவகாரம் ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சி, தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொள்ளாச்சியைக் கைப்பற்ற தி.மு.க அ.தி.மு.க இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. சண்முகசுந்தரம் கடந்த வாரம் வேட்பு மனுத்தாக்கல் செய்த நிலையில், மகேந்திரன் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார் மகேந்திரன்.

மேலும், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஓப்பன் வாகனத்தில் நின்றபடி, வரவேற்புகளை பெற்றுக்கொண்டு, வணக்கம் வைத்தபடியே வந்தார் மகேந்திரன். மகேந்திரன் பெயரில் 5,88,72,171 ரூபாயும்,  அவரின் மனைவி அருள்செல்வி பெயரில் 3,51,44,447 ரூபாயும் இருக்கின்றன. அதில், 5 கார்கள், 7 டிராக்டர், 7 டூ வீலர், ஒரு பஸ் உள்ளன. மேலும், மகேந்திரனுக்கு ரூ.34,91,400 மதிப்பில் 1,163 கிராம் தங்கமும், மனைவிக்கு ரூ.1,48,83,600 மதிப்பில் 4,961 கிராம் தங்கமும் உள்ளன. அசையா சொத்தாக மகேந்திரன் பெயரில் 6,16,45,439 ரூபாயும், மனைவி பெயரில் 15,77,74,284 ரூபாயும் உள்ளன. வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மூலமாக மகேந்திரனுக்கு 1, 37,03,516 ரூபாயும், மனைவிக்கு 5,49, 64,754 ரூபாய் கடன் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

மகேந்திரன்


வேட்பு மனுத்தாக்கல் செய்த பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த மகேந்திரன், ``வேறு எந்த எம்.பி-யும் செய்யாத அளவுக்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நான் செயல்படுத்தியுள்ளேன். மத்திய அரசுப் பள்ளி வர வேண்டும் என்பதற்காக எனது சொந்த நிலத்தை கொடுத்திருக்கிறேன். இந்த முறை நான் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்’’ என்றார்.