`பொதுஇடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்றுக!' - உயர் நீதிமன்றம் உத்தரவு | madras hc order to tn government

வெளியிடப்பட்ட நேரம்: 23:12 (25/03/2019)

கடைசி தொடர்பு:23:12 (25/03/2019)

`பொதுஇடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்றுக!' - உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கட்சிக் கொடி கம்பங்களை அகற்றி ஏப்ரல் 1-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட்

சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்படும் சாலைகளைத் தோண்டி, அரசியல் கட்சியினர், கட்சிக் கொடிக் கம்பங்களை நாட்டுகின்றனர். இது தமிழ்நாடு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். சாலையோரங்கள், பூங்காக்கள் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் நாட்டுவது தொடர்பான விதிகளை, மாவட்ட நிர்வாகங்களும், மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அமல்படுத்துவதில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சாலைகளைத் தோண்டுவதை கட்டுப்படுத்துவதற்கு எந்த ஒரு விதிமுறைகளும் இல்லை எனவும், கொடிக்கம்பங்கள் நடுவதால் அரசியல் கட்சிகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டு சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பொது இடங்களில் கட்சிக் கொடிக்கம்பங்களை அமைப்பதற்கு முழுத் தடை விதிக்க வேண்டும் என்று   2016-ம் ஆண்டு தமிழக தலைமைத்  தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஊரகப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 58,172 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள 799 கம்பங்களை அப்புறப்படுத்த ஊரக வளர்ச்சித் துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரசுத்தரப்பில்  தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து ஆகியவற்றிலும் கொடிக்கம்பங்கள் அகற்றியது குறித்து 21 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியர்கள்) தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்துள்ளதாக, தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, மீதமுள்ள 11 மாவட்டங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்றி ஏப்ரல் 1-ம் தேதி அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.