குடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்ட மக்களிடம் கொந்தளித்த அமைச்சர் மணிகண்டன்! | Minister Manikandan angry with the people who protest for water

வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (25/03/2019)

கடைசி தொடர்பு:22:20 (25/03/2019)

குடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்ட மக்களிடம் கொந்தளித்த அமைச்சர் மணிகண்டன்!

 குடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்ட மக்களிடம் ''யாருக்கு ஓட்டுப் போட்டீர்களோ அவரிடம் போய்க் கேளுங்கள்'' என அமைச்சர் மணிகண்டன்  கோபத்துடன் பேசியதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

குடிநீர் கேட்டு அமைச்சர் மணிகண்டன் காரை தடுத்த கிராம மக்கள்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் லாந்தை கருங்குளம். திருவாடானை தொகுதியில் இந்தக் கிராமம் இடம் பெற்றுள்ளது. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ-வாக நடிகர் கருணாஸ் இருந்து வருகிறார். இந்த நிலையில், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்  குடிநீர் இந்தக் கிராமத்துக்கு வழங்கப்படுவதில்லை. இதனால் இக்கிராமத்தில் உள்ளவர்கள் நெடுஞ்சாலைப் பகுதியைக் கடந்து வந்து பாதுகாப்பற்ற நிலையில் குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை ராமநாதபுரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் திரண்ட லாந்தை கருங்குளம் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் பரமக்குடி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல் நிகழ்ச்சிக்குச் சென்ற அமைச்சர் மணிகண்டனின் வாகனமும் மறியலில் மாட்டிக் கொண்டது. அமைச்சர்  மற்றும் அவருடன் வந்த கார்களில் பறந்த அ.தி.மு.க கொடியைக் கண்ட கிராம மக்கள் மேலும் ஆத்திரம் அடைந்தனர்.

மறியலில் ஈடுபட்ட மக்களிடம் வாக்குவாதம் செய்த அமைச்சர் மணிகண்டன்

இதையறிந்த அமைச்சர் மணிகண்டன் மறியலில் ஈடுபட்டவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது குடிநீருக்காக தாங்கள் படும் அல்லல்களை ஆவேசத்துடன் அமைச்சரிடம் முறையிட்டனர். மேலும், தண்ணீர் தரவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம் எனக் கோஷமிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அமைச்சர் மணிகண்டன், ``நீங்க எனக்கா ஓட்டுப் போட்டீர்கள்? யாருக்கு ஓட்டுப் போட்டீர்களோ அவரிடம் போய்க் கேளுங்கள்'' என ஆவேசமாகக் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராமமக்கள் மறியலைக் கைவிட மறுத்து அமைச்சருடன் வாக்குவாதம் செய்தனர்.

இதன் பின் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளைத் தொடர்புகொண்ட அமைச்சர் மணிகண்டன் உடனடியாக குடிநீர் பிரச்னையை தீர்க்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மறியலைக் கைவிட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

 தேர்தல் நேரத்தில் குடிநீர் கேட்ட மக்களிடம் கோபப்பட்ட அமைச்சர் மணிகண்டனின் செயலைக் கண்ட அவரது கட்சியினரும் அதிர்ச்சி அடைந்தனர்.