தே.மு.தி.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் உள்ள ஒற்றுமை இதுதான்… பிரேமலதா சொல்லும் விளக்கம் | various combination aiadmk and dmdk Premalatha explain

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/03/2019)

கடைசி தொடர்பு:09:52 (26/03/2019)

தே.மு.தி.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் உள்ள ஒற்றுமை இதுதான்… பிரேமலதா சொல்லும் விளக்கம்

உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருந்தால் அவர் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்திருப்பார் எனத் திருச்சி தே.மு.தி.க வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் பிரேமலதா விஜயகாந்த் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரேமலதா விஜயகாந்த்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க கட்சியின் வேட்பாளர் டாக்டர் இளங்கோவன் அறிமுகக் கூட்டம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் திருச்சி மாவட்டச் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது. அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, சிட்டிங் எம்.பி மற்றும் மாநகர் மாவட்டச் செயலாளர் ப.குமார், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, பி.ஜே.பி நிர்வாகி ஆக்ஸ்போர்டு  சுப்பிரமணி சகிதமாக தே.மு.தி.க கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டனர். அப்போது அவருக்கும் வேட்பாளருக்கும் தொண்டர்கள் மாலை அணிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ``அம்மாவிற்குப் பிறகு எங்களுக்குக் கிடைத்திருக்கும் நம்பிக்கை அண்ணியார்தான். கூட்டணிப் பேச்சுவார்த்தை ஆரம்பித்ததிலிருந்து தே.மு.தி.க வேறு கூட்டணிக்குப் போகாது என நம்பிக்கையோடு இருந்தோம். அதன்படியே கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் எங்களுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்றதைப் போன்று தே.மு.தி.க தற்போது எங்களுடன் இணைந்துள்ளது. இது இயற்கையான கூட்டணி. உள்ளாட்சி தேர்தலை நடத்தவிடாமல் செய்தது தி.மு.க. அவர்களால் இந்தத் தேர்தலில் எப்படி வெற்றிபெற முடியும். ஜெயலலிதா இறந்ததற்கும் விஜயகாந்த் உடல் நலன் குன்றியதற்கும் தி.மு.கதான் காரணம். நம் கூட்டணி எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தி இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவோம்” என முடித்தார்.

பிரேமலதா

தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த் ``நடிகராக இருந்த போதும் கட்சி ஆரம்பித்தபோதும் எங்கள் தலைவர் விஜயகாந்த் முன்மாதிரியாக கொண்ட ஒரே தலைவர் என்றால் எம்.ஜி.ஆர் மட்டும்தான். இந்தக் கூட்டணி ராசியான கூட்டணி. அதற்கு 2011 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வெற்றிதான் உதாரணம். எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி. 2011ல் ஜெயலலிதாவும் விஜயகாந்தும் இணைந்து அமைத்த கூட்டணி, தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் சாதனையைப் புரிந்தது. கூட்டணிக் கட்சிகளே, ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருந்தது. நமது இரு கட்சிகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. அ.தி.மு.கவும் -தே.மு.தி.க கட்சிகளின் பெயரிலும் நான்கு எழுத்து, இரண்டு கட்சிகளின், கரைவேட்டிக்கும் வித்தியாசம் இல்லை. இரண்டு கட்சிகளின் மகளிரணி கட்டும் சேலைகளுக்கும் வித்தியாசமும் இல்லை. குறிப்பாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் மூவரும் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றவர்கள். இவர்கள் மூவரும் சாதாரணமானவர்களை மிகப்பெரும் வல்லமை பெற்றவர்களாக மாற்றியவர்கள். இதுவும் அ.தி.மு.க-தே.மு.தி.கவுக்குமான ஒற்றுமை.

இந்தக் கூட்டணியில் இருப்பவர்கள் அதிக பக்தி கொண்டவர்கள். பக்தி இருக்கும் இடத்தில்தான் பணிவு இருக்கும். பதவி உள்ளபோது பணிவும், துணிவும் இருக்கவேண்டும் எனக் கூறியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். எதிரணியில் இருப்பவர்கள் பக்தி இல்லை என்பார்கள் ஆனால் கொல்லைப்புறம் வழியாகச் சென்று அனைத்துக் கடவுள்களையும் வணங்குவார்கள். இந்தக் கூட்டணி மே மாதம் வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும். எந்த மனக்கசப்பு இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்து விட்டு கூட்டணி வெற்றி பெற அனைவரும் சுறுசுறுப்பாக உழைக்க வேண்டும். நம்பி வந்தவர்களுக்குத் துணை நின்று அவர்களை வெற்றி பெற வைப்பவர்கள் அ.தி.மு.கவினர். ராகுல் காந்திக்கும் மோடிக்கும் மலைக்கும் மடுவுக்கும் இடையேயான வித்தியாசம் உள்ளது. மோடி நட்புணர்வோடு அனைத்து நாடுகளுக்கும் செல்வார், அதே நேரத்தில் நாட்டிற்கு ஒரு ஆபத்து என்றால் புலி போல் பாய்ந்து நாட்டைக் காக்கக் கூடியவர்.

எங்கள் கூட்டணி கட்சியினரின் தேர்தல் அறிக்கைதான் தே.மு.தி.க வின் தேர்தல் அறிக்கை. விரைவில் பிரதமர் மோடியிடம் தேசிய நதிகளை இணைக்கத் தே.மு.தி.க வலியுறுத்தும். மேலும், இந்தக் கூட்டணி அமையக் கூடாது எனப் பல சூழ்ச்சிகளை தி.மு.கவினர் செய்தனர். ஆனால், அதை முறியடித்துத்தான் இந்தக் கூட்டணி அமைத்துள்ளோம். அமெரிக்காவுக்கு விஜயகாந்தை அழைத்துச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்ட போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்த்திருந்தால் அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருப்பார் என தினமும் நினைத்தோம்.

18 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து இந்த ஆட்சி தொடர தே.மு.தி.க முழு ஒத்துழைப்பு தருவோம். விரைவில் தேர்தல் பிரசாரத்துக்கு விஜயகாந்த் வருவார். அதற்கான விவரம் விரைவில் வரும். தற்போது மருத்துவர்கள் அவருக்குப் பேச்சுப் பயிற்சி அளித்து வருகிறார்கள். பயிற்சியில் விஜயகாந்த் எம்.ஜி.ஆர் பாடல்களை மட்டுமே பாடுவார். அதுவும் ``ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறதே” என்கிற பாடலைதான் விஜயகாந்த் விரும்பிப் பாடுவார்” என சிவாஜிகணேசன் நடித்த பச்சைவிளக்கு திரைப்படத்தின் பாடலை எம்.ஜி.ஆர் பாடல் எனப் பாடி அ.தி.மு.க தொண்டர்களுக்கு ஷாக் கொடுத்து முடித்தார்.  அதேபோல் நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகையில் பா.ம.க பெயர் மிஸ் ஆகியிருந்ததும் அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்தது.