5 ஆண்டுகளில் பெரிய மாற்றமில்லை - நீலகிரி தொகுதி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவின் சொத்துப் பட்டியல் | DMK Candidate A.Raja property details from nomination

வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (26/03/2019)

கடைசி தொடர்பு:09:53 (26/03/2019)

5 ஆண்டுகளில் பெரிய மாற்றமில்லை - நீலகிரி தொகுதி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவின் சொத்துப் பட்டியல்

நீலகிரி தனித் தொகுதியில் தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. நீலகிரி தொகுதியில் தி.மு.க சார்பில் மூன்றாவது முறையாக ஆ.ராசா போட்டியிடுகிறார். இதனால், நீலகிரி தொகுதி கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.

 ஆ. ராசா

இந்தச் சூழலில், திமுக வேட்பாளர் ஆ.ராசா நேற்று மதியம் 1 மணியளவில், ஊட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நீலகிரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இன்னசென்ட் திவ்யாவிடம் மனு தாக்கல்செய்தார். வேட்புமனுவில் அவரது சொத்துப் பட்டியலில், கடந்தமுறை குறிப்பிட்ட சொத்து மதிப்பில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. கடந்த 2014 -ம் ஆண்டு அவர் தாக்கல் செய்த சொத்து விவரங்களே இந்தத் தேர்தலில் தாக்கல்செய்த வேட்புமனுவிலும் தெரிவித்துள்ளார். 

இதன்படி ஆ.ராசா பெயரில் அசையும் சொத்துக்கள் 1 கோடியே 40  லட்சத்து 90 ஆயிரத்து 709 ரூபாய், அசையா சொத்துக்கள் மதிப்பு ரூ.14 லட்சத்து 87 ஆயிரத்து 419 ருபாய் என குறிப்பிட்டுள்ளார். மனைவி பரமேஸ்வரி பெயரில் அசையும் சொத்துக்கள் ரூ. 93 லட்சத்து 93 ஆயிரத்து 597, அசையா சொத்துக்கள் ரூ.14 லட்சத்து 12 ஆயிரத்து 975 எனவும்  மகள் மயூரி பெயரில் அசையும் சொத்துக்கள் ரூ.18 லட்சத்து 15 ஆயிரத்து 400. பரம்பரை சொத்துக்களில் அசையும் சொத்து மதிப்பு ரூ.41 லட்சத்து 3 ஆயிரத்து 540 மற்றும் அசையா சொத்துக்கள் ரூ.14 லட்சத்து 53 ஆயிரத்து 875 என மொத்தம் ரூ. 3 கோடியே 75 லட்சத்து 42 ஆயிரத்து 880 மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.

நீலகிரி

இதில், ராசாவுக்கு சொந்தமாக 108 சவரன் தங்கம், மனைவி பரமேஸ்வரிக்கு சொந்தமாக 175 சவரன் தங்க நகைகள் மற்றும் மகள் மயூரிக்கு 25 சவரன் தங்க நகைகளும் உள்ளன. ராசாவுக்கு சொந்தமாக 4.182 கிலோ வெள்ளி, மனைவிக்கு சொந்தமாக 10 கிலோ வெள்ளி மற்றும் மகளுக்கு சொந்தமாக ரூ.12 லட்சம் மதிப்பிலான வைர கம்மல் மற்றும் நெக்லஸ் உள்ளன.

ராசாவின் பெயரில், திருச்சியில் ரூ.32 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான வீடு. மனைவி பரமேஸ்வரி பெயரில் ரூ.14 லட்சம் மதிப்பிலான 10.53 ஏக்கர் நிலம், திருச்சி மற்றும் பெரம்பலூரில் உள்ளன. பெரம்பலூரில், ரூ.8 லட்சத்து 3 ஆயிரத்து 875 மதிப்பிலான பரம்பரைச் சொத்தாக 1.62 ஏக்கர் நிலம் உள்ளது.

மேலும், ரூ.13 லட்சம் மதிப்பிலான நான்கு சக்கர வாகனமும் உள்ளது. ஆ.ராசா மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், வருமான வரித் துறையில் மதிப்பீடு செய்யப்படாமல் ரூ.25 லட்சத்து 52 ஆயிரத்து 260 ரூபாய் நிலுவை உள்ளது எனவும் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.