`ஒரு பூத்திற்கு 1,500 ரூபாய்!'- அமைச்சர் கூட்டத்தில் நடந்த பணப் பட்டுவாடா | In minister program, money distributed

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (26/03/2019)

கடைசி தொடர்பு:09:54 (26/03/2019)

`ஒரு பூத்திற்கு 1,500 ரூபாய்!'- அமைச்சர் கூட்டத்தில் நடந்த பணப் பட்டுவாடா

தமிழகத்தில், நாடாளுமன்றத் தேர்தல்திருவிழா அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பம்பரம்போல சுழன்று வாக்கு சேகரித்துவருகிறனர். ஆங்காங்கே பணப் பட்டுவாடாவும் செய்யப்பட்டுவருகிறது. 

வேட்பாளர்


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர், செஞ்சி சேவல் ஏழுமலைக்கு வாக்கு சேகரிப்பது குறித்து செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம், ஆரணியில் ஒரு தனியார் மண்டலத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆரணி வேட்பாளர் செஞ்சி சேவல் ஏழுமலை மற்றும்  ஏராளமான அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.  கூட்டத்தில், மக்களிடம் வாக்குகள் சேகரிப்பதுகுறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில்  கலந்துகொண்ட அனைவருக்கும் வடை பாயாசத்துடன் விருந்து வைத்தார், வேட்பாளர் சேவல் ஏழுமலை. கூட்டம் முடிந்ததும் பூத் நிர்வாகளுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டது. ஒரு பூத்திற்கு 1,500 வீதம், 350 பூத்திற்கு பணப் பட்டுவடா மண்டபதிலேயே வழங்கப்பட்டது. பணத்தை வாங்கிகொண்ட பூத் நிர்வாகிகள், ஒன்றுக்கு இரண்டுமுறை பணத்தை எண்ணிப்பார்த்து வாங்கிச் சென்றனர்.  இந்த பணப் பட்டுவாடவைத் தேர்தல் பறக்கும் படை கண்டுகொள்ளவே இல்லை. பணப் பட்டுவாடாவைக்  கண்டுகொள்ளாத தேர்தல் பறக்கும்படைக்கு எதிர்க்கட்சிகாரர்கள் எதிர்பு தெரிவித்துள்ளனர். 

பணப் பட்டுவாடா


``பணப் பட்டுவாடா பட்டப்பகலில் நடைபெறுகிறது. இதனைத் தடுக்க முடியாத தேர்தல் பறக்கும்படை, விவசாயிகள், மாட்டு வியாபாரிகள், சிறு குறு வணிகர்கள் கொண்டுபோகும் சிறு தொகையைப் பறிமுதல்செய்து அதற்கு ஆதாரம் கேட்கிறார்கள். மாடு விற்பனை செய்யும் வியாபாரி கம்ப்யூட்டர் பில்லா எடுத்து வருவான்?” என்று கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

``முதுகெலும்பு இல்லாத தேர்தல் பறக்கும்படைகள், தேர்தல் கமிஷனுக்கு கணக்குக் காட்டவே விவசாயிகளின் வயிற்றிலும் வியாபாரிகளின் வயிற்றிலும் அடிக்கிறார்கள். இப்போது, ஆரணியில் பணப் பட்டுவாடா நடந்துள்ளது. அதை மீடியாக்கள் வெளிச்சம்போட்டுக் காமித்தன. ஆனாலும், தேர்தல் பறக்கும்படை அவர்களைக் கைதுசெய்ய மாட்டார்கள், நடவடிக்கைகள் எடுக்க மாட்டார்கள் என்று குமுறுகிறார்கள் ஆரணி சமூக ஆர்வலர்கள்.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க