`ஓட்டு போட்டால் மகிழ்ச்சி; இல்லையென்றால் மிக்க மகிழ்ச்சி’ - சேலம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் | Nam tamilar candidate filed nomination in selam

வெளியிடப்பட்ட நேரம்: 09:55 (26/03/2019)

கடைசி தொடர்பு:09:55 (26/03/2019)

`ஓட்டு போட்டால் மகிழ்ச்சி; இல்லையென்றால் மிக்க மகிழ்ச்சி’ - சேலம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

`எனக்கு ஓட்டு போட்டால் மகிழ்ச்சி. போடவில்லையென்றால் மிக்க மகிழ்ச்சி. ஆனால், மக்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். எக்காலத்திலும் உங்களுக்கான அமைப்பாக நாம் தமிழர் கட்சி இருக்கும்’ எனச் சேலத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன் தெரிவித்தார். 

ஓட்டு

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன் நேற்று (25 -ம் தேதி) சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

அதையடுத்து அவரிடம் பேசினோம், ``தமிழ் மொழி, கலாசாரம், பண்பாட்டைக் காக்க நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகளாகிய நாங்கள் பாடுபடுவோம். உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களுக்கென்று ஒரு இடமில்லை. தமிழ்நாட்டில் தமிழை இரண்டு திராவிட கட்சிகளும் அழித்தொழித்து வருகிறார்கள். அவர்களிடமிருந்து தமிழையும், தமிழ்க் கலாசாரத்தையும் மீட்டெடுக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கு விரோதமாக இரண்டு திராவிடக் கட்சிகளும் கொண்டு வந்த ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், ஸ்டெர்லைட் நிறுவனம், 8 வழிச் சாலை, டவர் லைன், கெயில் குழாய் பதிப்பு ஆகியவற்றை நாங்கள் வெற்றி பெற்றால் தடுத்து நிறுத்துவோம். இங்கு 8 வழிச் சாலை தேவையில்லை. இருக்கின்ற சாலையை விரிவுபடுத்தினாலே போதுமானது. குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை. பயிர்கள் கருகிப் போகிறது. ஆடு, மாடுகள் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறது. இப்படி மண் சார்ந்த, மரபு சார்ந்த பிரச்னைகளுக்காக மக்களோடு மக்களாக இருந்து தீர்த்து வைப்போம்.  

ஆனால், மக்கள் தமக்காகப் போராடுபவர்களை அறிந்துகொள்ளாமல் ஓட்டு அரசியல்வாதிகளையும், சினிமாக்காரர்களையும் நம்பிப் போவது வேதனையாக இருக்கிறது. எனக்கு ஓட்டுப் போட்டால் மகிழ்ச்சி. போடவில்லையென்றால் மிக்க மகிழ்ச்சி. ஆனால், மக்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். எக்காலத்திலும் உங்களுக்கான அமைப்பாக நாம் தமிழர் கட்சி இருக்கும். உங்களுக்கான பாதுகாப்பான அரணாகச் செயல்படும்'' என்றார்.