``பா.ஜ.க-வுடன் கூட்டணி!" - காங்கிரஸில் இணையும் த.மா.கா குமரி மேற்கு மாவட்ட தலைவர் | Kumari Election 2019 news

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (26/03/2019)

கடைசி தொடர்பு:10:50 (26/03/2019)

``பா.ஜ.க-வுடன் கூட்டணி!" - காங்கிரஸில் இணையும் த.மா.கா குமரி மேற்கு மாவட்ட தலைவர்

பா.ஜ.க-வுடன் த.மா.கா கூட்டணி வைத்தது பிடிக்காமல், மாவட்ட கமிட்டியை கலைத்துவிட்டு காங்கிரஸில் சேர உள்ளார், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங். தேர்தல் நேரத்தில் த.மா.கா மாவட்ட கமிட்டி கலைக்கப்பட்ட சம்பவம் பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பினுலால் சிங்


கன்னியாகுமரி மேற்கு மாவட்ட த.மா.கா தலைவராக இருந்தவர் டாக்டர் பினுலால் சிங். ஜி.கே.வாசன் காங்கிரஸில் இருந்து பிரிந்து த.மா.கா தொடங்கியதும் டாக்டர் பினுலால் சிங் காங்கிரஸில் இருந்து பிரிந்து, த.மா.கா-விற்குச் சென்றார். த.மா.கா மேற்கு மாவட்ட தலைவராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ ஜாண்ஜேக்கப் மரணம் அடைந்ததை  அடுத்து, கடந்த ஆண்டு டாக்டர் பினுலால் சிங் மேற்கு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க கூட்டணியில் த.மா.கா இணைந்தது. இந்த நிலையில், த.மா.கா கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவர் பதவியை டாக்டர் பினுலால்சிங் ராஜினாமா செய்தார். மேலும், மேற்கு மாவட்ட கமிட்டியையும் கலைத்தார். இதனால் குமரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பினுலால் சிங்


இதுகுறித்து பினுலால் சிங் கூறுகையில், ``பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கக் கூடாது என நாங்கள் மாவட்ட கமிட்டியில் தீர்மானம் போட்டோம். அதையும் மீறி கூட்டணி வைத்தார்கள். அதைத் தொடர்ந்து, குருசு மலை சர்ச்சுக்கு மின்சார வசதி செய்துதர மத்திய அமைச்சர் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், கன்னியாகுமரி வர்த்தகத் துறைமுகம் அமைக்கும் இடம்குறித்து ஆர்.சி.பிஷப் தலைமையில் குழு அமைத்து இடம் தேர்வுசெய்ய வேண்டும். தனியார் காடுகள் சட்டத்தால் மக்கள் அவதியடைவதால், குமரி மாவட்ட மக்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தோம். அது மூன்றையும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிராகரித்தார். இதைத் தொடர்ந்து, மாவட்ட கமிட்டியைக் கலைத்துவிட்டோம். மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்ததுடன், விரைவில் காங்கிரஸில் இணைய உள்ளேன்" என்றார். தேர்தல் சமயத்தில் த.மா.கா மாவட்டத் தலைவர் ராஜினாமா செய்துவிட்டு கமிட்டியைக் கலைத்ததால், பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் அதிர்ச்சியடைந்துள்ளார்.