`விவசாய நிலம் இல்லை; 64 லட்சம் கடன் இருக்கு!'- வேட்பு மனுவில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தகவல் | EVKS Ilangovan filed nomination

வெளியிடப்பட்ட நேரம்: 10:51 (26/03/2019)

கடைசி தொடர்பு:10:51 (26/03/2019)

`விவசாய நிலம் இல்லை; 64 லட்சம் கடன் இருக்கு!'- வேட்பு மனுவில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தகவல்

தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு, தேனி நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ளார். நேற்று மதியம், தேனி மாவட்ட கலெக்டரிடம் வேட்புமனு தாக்கல்செய்தார். உடன், தாக்கல்செய்த அஃபிடவிட்டில் இருந்து அவரது சொத்துமதிப்புகள் சம்பந்தமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

அசையும் சொத்து விவரம் :

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கையில், 7 லட்சத்து 46 ஆயிரத்து 661 ரூபாய் இருப்பதாகவும், தனது மனைவி கையில் 11 லட்சத்து 87 ஆயிரத்து 321 ரூபாய் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனைத் தலைவராகக்கொண்ட கூட்டுக்குடும்பத்தில் 8 லட்சத்து 7 ஆயிரத்து 837 ரூபாய் கையில் பணம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். 24 லட்சத்து 33 ஆயிரத்து 326 ரூபாய் மதிப்புள்ள Toyota கார் தனது பெயரில் இருப்பதாகவும், கூட்டுக்குடும்பத்தின் பெயரில் 12 லட்சத்து 79 ஆயிரத்து 920 ரூபாய் மதிப்புள்ள Wolkswagon கார் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் இருப்பதாகவும், தனது மனைவியிடம் 15 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மொத்தமாக, அசையும் சொத்துகள் என்று மதிப்பிட்டால், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெயரில் 2 கோடியே 33 லட்சத்து 26 ஆயிரத்து 360 ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும், அவரது மனைவி பெயரில், 39 லட்சத்து 49 ஆயிரத்து 613 ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும், கூட்டுக்குடும்பத்தின் பெயரில் 21 லட்சத்து 65 ஆயிரத்து 294 ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும்ள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  

வேட்பு மனு தாக்கல் செய்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

அசையா சொத்து விவரம் :

தன்னிடம் விவசாய நிலம் எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தனது மனைவி பெயரில் விவசாய நிலம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தனது பெயரில் 3 கோடியே 23 லட்சத்து 98  ஆயிரத்து 465 ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள் இருப்பதாகவும், தனது மனைவி பெயரில் 3 கோடியே 81 லட்சத்து 98 ஆயிரத்து 379 ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடன் விவரம் :

தனக்கு 64 லட்சத்து 27 ஆயிரத்து 457 ரூபாய் கடன் இருப்பதாகவும், தனது மனைவி பெயரில் 1 கோடியே 94 லட்சத்து 970 ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.