பி.இ, பி.காம் மட்டும் படித்தால் போதுமா...?! வேலை கிடைக்க வேறென்ன படிக்கலாம்?! | What are the courses after plus two?

வெளியிடப்பட்ட நேரம்: 15:33 (26/03/2019)

கடைசி தொடர்பு:15:33 (26/03/2019)

பி.இ, பி.காம் மட்டும் படித்தால் போதுமா...?! வேலை கிடைக்க வேறென்ன படிக்கலாம்?!

பி.இ, பி.காம் மட்டும் படித்தால் போதுமா...?! வேலை கிடைக்க வேறென்ன படிக்கலாம்?!

ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவடைந்து, விடுமுறை ஆரம்பித்துவிட்டது. ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தேர்வு முடிவு வெளியாகவுள்ளது. பி.இ., பி.எஸ்ஸி., பி.காம் என எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம், எந்தக் கல்லூரியில் சேரலாம், வேலைவாய்ப்புக்கு உத்தரவாதமுள்ள படிப்பு எதுவென மாணவர்கள் - பெற்றோர்களிடையே ஆலோசனை நடக்கிறது. மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கு உதவும் சில டிப்ஸ்...

கல்லூரி தேர்வு பி.காம் படிப்பு வேலை வாய்ப்பு

கல்லூரிப் படிப்புகளில் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது, அப்படித் தேர்ந்தெடுத்துப் படிக்கும் படிப்புக்குரிய வேலைவாய்ப்பு கிடைக்குமா என, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏராளமான கேள்விகள் எழும். இதுகுறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தியிடம் பேசினோம்.

``ப்ளஸ் டூ முடித்து, இந்த ஆண்டு கல்லூரியில் நுழைபவர்கள் 2023-24 ம் ஆண்டில் கல்லூரிப் படிப்பை முடிப்பார்கள். அப்போது என்ன வேலைவாய்ப்பு இருக்கும் என்பதை இப்போதே கணித்து, படிப்பைத் தேர்ந்தெடுப்பது அவசியம். படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்துபவர்கள், இனி பி.இ, பி.காம் என டிகிரி மட்டும் படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்காது. இனிவரும் காலங்களில் படைப்பாற்றலும், வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கான தொழில்நுட்பமும் தெரிந்திருந்தால் மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கும். படைப்பாற்றல் சுதந்திரத்தையும் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள உதவும் வகையில் உள்ள கல்லூரியைத் தேர்தெடுக்க வேண்டும். 

தற்போது, 32 சதவிகித வேலைகள் தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்கின்றன. அடுத்த ஐந்தாண்டில் 76 சதவிகித வேலைகள் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தும்வகையில் மாறும். இதை உணர்ந்து படிக்க வேண்டும். ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ், ரோபோடிக், மெஷின் லேர்னிங், ஆட்டோமேஷன் சார்ந்து தகவல் தொழில்நுட்பம் முன்னேறிவருகிறது. வங்கித் துறையானாலும் சரி, உற்பத்தித் துறையானாலும் சரி அனைத்துத் துறைகளிலும் மேற்சொன்ன பிரிவுகளின் தாக்கம் அதிகரித்துவருகிறது. இதுசார்ந்த டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவை வளர்த்துகொள்ள வேண்டும். 

இந்தியாவில்  அடுத்த ஐந்தாண்டில் ரோபோடிட் புராசஸிங் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தில் 5 லட்சம் பேர் தேவை. ஆனால், 50,000 பேர்கூட இல்லை. கம்ப்யூட்டர் விஷன் தொழில்நுட்பத்தில் நிறையபேர் தேவை. ஆனால்,  ஆள் இல்லை. இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் இல்லை. திறமையில்லாத் திண்டாட்டம்தான் உள்ளது. பி.ஏ., பி.காம்., பி.எஸ்ஸி என எந்தப் படிப்பு வேண்டுமானாலும் படிக்கலாம். மேற்கண்ட பிரிவுகளில் படித்தால் வேலைவாய்ப்பைப் பெறலாம். எந்த மாணவன் பாடத்திட்டத்தைத் தாண்டி அந்தத் துறை சார்ந்த தொழில்நுட்பத்தைப் படிக்கிறாரோ அவருக்கு நிச்சயம் வேலைவாய்ப்பு உண்டு. 

வேலை வாய்ப்பு

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு, டிப்ளோமா படிப்புகள் படித்தால் வேலைவாய்ப்பு அதிகம் இருந்தது. தற்போது, டிப்ளோமா படித்தாலும் வேலைவாய்ப்பு என்பது குறைந்துவருகிறது. இதற்குக் காரணம், ஆட்டோமேஷன் என்பது அதிகரித்துவருவதே. மனிதனுக்கும் மனிதனுக்கும் போட்டி என்பது மாறி, மனிதனுக்கும் மெஷினுக்கும் போட்டி என மாறிவருகிறது. எந்தவொரு மாணவர், தன்னுடைய படிப்பையும் தாண்டி அதிகமாகவும் விரைவாகவும் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்கிறாரோ அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. 

தற்போது, பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு படிப்புகள் (M.Sc. Intergrated) உள்ளன. இதில் சில சிறப்புகள் உள்ளன. ப்ளஸ் டூ முடித்தவுடன் கல்வி நிறுவனத்தில் இடம் கிடைத்துவிட்டால் எந்தப் பிரச்னையும் இல்லாமல் முதுநிலைப் பட்டப்படிப்பு வரை படித்து முடித்துவிட்டு, கல்வி நிறுவனத்திலிருந்து வெளியே வரலாம். பி.எஸ்ஸி மட்டும் முடித்துவிட்டு பிறகு மீண்டும் கல்வி நிறுவனத்தில் சேர நிற்கவேண்டிய அவசியமில்லை. 

எந்தக் கல்வி நிறுவனத்தில் அதிகளவில் வளாகத் தேர்வு (கேம்பஸ் இன்டர்வியூ) நடத்துகிறார்கள் என்பதை அறிந்து, அந்தக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க வேண்டும்.  தற்போது, கல்லூரி முடித்து வெளியே வந்து வேலைவாய்ப்பைப் பெறுவது என்பது கடினமாகிவருகிறது. ஒருங்கிணைந்த ஐந்தாண்டு படிப்பில் படிக்கும் மாணவர்கள், பள்ளி ஆசிரியர் போன்ற பணிகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. ஆகையால், இதையெல்லாம் தெரிந்துகொண்டு சேரவேண்டியது அவசியம். தற்போது, சட்டப்படிப்பு, ஹோட்டல் மேனேஜ்மென்ட் போன்ற படிப்புகளுக்கு, தேசிய அளவிலான கல்லூரிகளில் படிப்பதற்கு விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இதையும் மாணவர்கள் அறிந்து விண்ணப்பிக்க வேண்டும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஏதேனும் ஒரு டிகிரி படித்துக்கொண்டே கூடுதலாக கம்ப்யூட்டரையும் கற்றுக்கொண்டால் வேலைவாய்ப்பு என்று இருந்தது. ஆனால், தற்போது கல்லூரியில் சேர உள்ள மாணவர்கள் பல்துறையிலும் திறமையை வளர்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. இதனால், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெட்ரானிக்ஸ், எனர்ஜி எனப் பல துறைகள் சார்ந்த திறன்களை வளர்த்துக்கொள்ளலாம். மெக்ட்ரானிக்ஸ், ரோபோட்டிக்ஸ் போன்ற தொழில்நுட்பங்களும் வளர்ந்துவருகின்றன. ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ், மெஷின் லேர்னிங் போன்ற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். 

கல்லூரி படிப்புகள் வேலை வாய்ப்பு

மருத்துவத் துறையில் நீட் தேர்வு எழுதி வெற்றிபெறுபவர்கள், எம்.பி.பி.எஸ் சேர முயல்வார்கள். அப்படிக் கிடைக்காதபட்சத்தில் கால்நடை மருத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். இந்திய  மருத்துவப் படிப்புகளான நேச்சுரோபதி, யோகா போன்ற படிப்புகள், நியூட்ரீஷியன் போன்ற படிப்புகள், ஸ்பீச் தெரபி, பிசியோதெரபி எனப் பல மருத்துவப் படிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. ஆனால், மேற்படிப்பு படித்து நிபுணத்துவம் பெற்றால் மட்டுமே வேலைவாய்ப்பில் சிறப்பாகச் செயல்பட முடியும். 

தற்போது பாதுகாப்புத் துறையில், மத்திய அரசு அதிக கவனம் செலுத்துகிறது. நிதிநிலை அறிக்கையிலும் அதிக நிதி, பாதுகாப்புத் துறைக்குத்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடனே விமானப்படை, கப்பற்படைகளிலும் தேர்வெழுதி வேலைவாய்ப்பைப் பெறலாம். பட்டப்படிப்பு முடித்தவுடன் Combined Defence Service Exam எழுதலாம். விமானப்படையில் Airforce Common Entrance Exam என்று உள்ளது. இதை எழுதி விமானப்படை அதிகாரிகள் ஆகலாம்.  இந்தத் தேர்வுகளுக்கு, கல்லூரியில் சேர்ந்தவுடனே தயாரிப்புப் பணியைத் தொடங்கலாம்.

தற்போது சுற்றுச்சூழல் சார்ந்த கவனம் அதிகரித்துவருகிறது. இதற்கு, சிவில் இன்ஜினீயரிங் படித்தால் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளைப் பெறலாம். பி.எஸ்ஸி-யிலும் சுற்றுச்சூழல் சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்தத் துறையில் வேலைவாய்ப்பை முதன்மையாகக் கருதாமல், ஆராய்ச்சியில் அதிகம் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். சுற்றுச்சூழல் ஆலோசனை குறித்த பணிகள் கிடைக்கும்.

நுழைவுத் தேர்வு

தற்போது ப்ளஸ் டூ வகுப்பு முடித்தவர்கள் வாய்ப்பு தேடுவது என்பது, குறைந்த வாய்ப்பில் நல்ல வாய்ப்பைத் தேடுவதுபோல் அமைகிறது. இதை ப்ளஸ் ஒன் வகுப்பில் படிக்கும்போதே தகுந்த கவனம்கொள்ளவேண்டியது அவசியம். இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான கட் ஆஃப் எவ்வளவு, ஐ.ஐ.டி - ஜே.இ.இ கட் ஆஃப் எவ்வளவு என்பது போன்ற விஷயங்களைக் கூர்மையாகக் கவனிக்க வேண்டும். நுழைவுத்தேர்வுகள் எப்போது அறிவிக்கிறார்கள் என்பது போன்ற விவரங்களையும் அறிந்துகொள்ள வேண்டும். இப்போது அடிப்படை வேலையைச் செய்துவிட்டால் ப்ளஸ் டூ வகுப்பு எளிதாக இருக்கும்.

இந்த ஆண்டு, பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுகள் ஆன்லைன் வழியே நடக்கவுள்ளன. கடந்த ஆண்டு, நிறைய பேர் ஆன்லைன் கலந்தாய்வில் கல்லூரியைத் தேர்வுசெய்த பிறகு, கல்லூரியில் சேரச் செல்லும்போது கட்டணம் விவரங்கள் மற்றும் இதர விஷயங்களால் ஸ்தம்பித்து நின்றனர். இதைத் தவிர்க்கும்வகையில், இப்போதே கல்லூரி குறித்த விவரங்கள், கட்டணங்கள் போன்ற விவரங்களையும், கூடுதல் கட்டணங்கள் எவ்வளவு பெறுகிறார்கள் என்பதையெல்லாம் அறிந்துகொள்ள வேண்டும்.

மாணவர்கள் தங்களுடைய எதிர்காலம் குறித்து கொஞ்சம் ஆராய்ச்சி செய்ய வேண்டும். பி.காம், பி.எஸ்ஸி என எந்தப் படிப்பைப் படித்தாலும் கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்ளவும். அந்தத் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து ஆராய, பெற்றோர்கள் உதவி செய்ய வேண்டும். என்னென்ன திறன்களை வளர்த்துக்கொள்வது என்பதன் தேவையை அறிந்து, அதற்குத் தகுந்தாற்போல் செயல்பட்டாலே வேலைவாய்ப்புகள்  நிச்சயம்.''


டிரெண்டிங் @ விகடன்