`திருநாவுக்கரசுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னான், மகனுக்கு சம்மன் அனுப்பிட்டாங்க!'- தி.மு.க பொறுப்பாளர் தகவல் #Pollachi | CBCID summons to Dmk Thendral Manimaran over Pollachi issue

வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (26/03/2019)

கடைசி தொடர்பு:13:22 (26/03/2019)

`திருநாவுக்கரசுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னான், மகனுக்கு சம்மன் அனுப்பிட்டாங்க!'- தி.மு.க பொறுப்பாளர் தகவல் #Pollachi

பொள்ளாச்சி பாலியல் வழக்கில், அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜ்  மற்றும் தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் மகன் தென்றல் மணிமாறன் ஆகியோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

பார் நாகராஜ்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில், ஆரம்பம் முதலே அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டுவந்தது. குறிப்பாக, புகார் அளித்த பெண்ணின் சகோதரரைத் தாக்கியதற்காக, அ.தி.மு.க-வைச் சேர்ந்த பார் நாகராஜ் என்பவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். பிறகு ஜாமீனில் விடுதலையான நாகராஜ், அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டார். அதேபோல, தி.மு.க புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரான தென்றல் செல்வராஜின் மகன் தென்றல் மணிமாறன், இந்தக் கும்பலின் நட்புப் பட்டியலில் இருந்துள்ளார்.

இதில், முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு, மணிமாறன் சமூக வலைதளங்களில் செய்த உரையாடல்கள் வேகமாகப் பரவின. மணிமாறன் தி.மு.க பிரமுகராக இருந்தாலும், கனிமொழி தலைமையில் குற்றவாளிகளைக் கண்டித்து பொள்ளாச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில், பார் நாகராஜ் மற்றும் தென்றல் மணிமாறன் ஆகியோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் 28-ம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிட்டத்தக்கது.

மணிமாறன்

இது தொடர்பாகத் தென்றல் செல்வராஜிடம் விளக்கம் கேட்டபோது, "திருநாவுக்கரசு இவரது முகநூல் நண்பன். முகநூலில் இருப்பவர்களுக்கு எப்போதுமே பிறந்தநாள் வாழ்த்து சொல்வது மணிமாறனின் வழக்கம். அப்படித்தான் திருநாவுக்கரசுக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்து சம்மன் கொடுத்தனர். வழக்கை திசை திருப்புவதற்காகத்தான் இப்படி செய்கிறார்கள். இதை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்" என்று கூறினார்.

பார் நாகராஜைத் தொடர்பு கொண்டோம். ஆனால், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.