`நீங்க அப்போ சிறப்பா செயல்பட்டீங்க; இப்போ, கார்த்தி சிதம்பரத்துக்கு திறமை இருக்கு!'- சுதர்சனத்தை கூல்படுத்தும் திருநாவுக்கரசர் | Karthik Chidambaram has got seat because of qualification and talent - Thirunavukkarar

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (26/03/2019)

கடைசி தொடர்பு:10:11 (27/03/2019)

`நீங்க அப்போ சிறப்பா செயல்பட்டீங்க; இப்போ, கார்த்தி சிதம்பரத்துக்கு திறமை இருக்கு!'- சுதர்சனத்தை கூல்படுத்தும் திருநாவுக்கரசர்

``கார்த்தி சிதம்பரத்திடம் தகுதி மற்றும் திறமை இருப்பதால்தான் வேட்பாளராக நிற்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு, சுதர்சன நாச்சியப்பன் செயல்பட வேண்டும்'' என திருச்சி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் பேசினார்.

காங்கிரஸ் கட்சியின் திருச்சி தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்,  'நான் போட்டியிடும் திருச்சி தொகுதியில், மேலும் தொழில் வளர்ச்சியை உருவாக்க முயல்வேன். தொகுதி மக்களுக்கு வாக்குறுதிகள் கொடுப்பதற்குப் பதிலாக, செய்வதுதான் சிறந்தது. நோட்டாவிற்கு வாக்கு அளிக்கக்கோரி, புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி மீட்புக்குழு போராடிவருகிறது. நோட்டாவிற்கு வாக்களிப்பதால் மட்டும் தொகுதி மீண்டும் கிடைத்துவிடுமா? எதிர்ப்பைப் பலமுறை தெரிவித்துள்ளோம். புதுக்கோட்டை தனித் தொகுதியாக இருக்க வேண்டியதுதான். நோட்டா வாக்கு என்னுடைய வாக்கு வங்கியை உடைத்துவிடும் என்று கூற முடியாது. தொகுதி மறுசீரமைப்பின்போது, மீண்டும் புதுக்கோட்டைக்கு தொகுதி கிடைக்கும்.

திருச்சியில், காங்கிரஸ் கட்சிக்குள் எந்த கோஷ்டி பூசலும் கிடையாது. கூட்டணிக் கட்சிகள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். கார்த்தி சிதம்பரத்திடம் தகுதி மற்றும் திறமை இருக்கிறது. அதனால், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேர்தல் குழு யாரை அதிகாரபூர்வ வாக்காளராக அறிவிக்கிறதோ, அவர்களின் வெற்றிக்காக கட்சியினர் அனைவரும் பாடுபட வேண்டும். சுதர்சன நாச்சியப்பன், அவர் காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். ஆனாலும், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதை ஏற்றுக்கொண்டு, சுதர்சன் நாச்சியப்பன் செயல்பட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொண்டேன். திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள்கூட எனக்கு பலமான வேட்பாளராகத் தான் கருதுகிறேன். தி.மு.க மீது பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டுவது தவறு. விஜயகாந்த் சொந்த புத்தியுடன் செயல்படவில்லை என்று கூறுவது கணவனை இழிவுபடித்தும் செயலாகும்" என்று கூறினார்.