`50 வயசாச்சு, ஓட்டுப்போட முடியல!'- புதுக்கோட்டை கலெக்டரிடம் முறையிட்ட முதியவர் ஆதங்கம் | The old man petitioned to collector regarding vote

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (26/03/2019)

கடைசி தொடர்பு:12:15 (26/03/2019)

`50 வயசாச்சு, ஓட்டுப்போட முடியல!'- புதுக்கோட்டை கலெக்டரிடம் முறையிட்ட முதியவர் ஆதங்கம்

50 வயதுக்கு மேல் ஆகியும், எந்தவித ஆவணங்களும் தன்னிடம் இல்லாததால், ஒரு தடவைகூட தன்னால் ஓட்டுப் போட முடியவில்லை என கந்தர்வகோட்டையைச் சேர்ந்த முதியவர் ஒருவர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்.

கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்த முனியாண்டி

கந்தர்வகோட்டையைச் சேர்ந்த முனியாண்டி (60) மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்,  'கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே பெற்றோர்கள் இறந்துவிட்டனர். இருந்த  வீட்டையும் இறப்பதற்கு முன்பே விற்றுவிட்டனர். என்னுடன் பிறந்த சகோதரிகளும் திருமணமாகி கணவர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். நான் தனித்து விடப்பட்டேன். கந்தவர்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே புறம்போக்கு இடத்தில் குடியிருந்துவருகிறேன். மழை நேரத்தின்போது, பள்ளிக் காவலரின் அனுமதிபெற்று வராண்டாவில் படுத்துக்கொள்வேன். வேலை ஏதும் கிடைக்கவில்லை. இறப்பு வீடுகளுக்குச் சென்று ஒப்பாரிவைத்து, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்திவருகிறேன். எனக்கான எந்தவித ஆவணமும் என்னிடம் இல்லை. உரிய முகவரி இல்லையென்று, என்னை மக்கள்தொகை கணக்கெடுப்பிலோ, வாக்காளர் பட்டியலிலோ சேர்க்கவில்லை.

இதேபோல, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை என எந்த ஆவணமும் என்னிடம் இல்லை. தாலுகா அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் எந்தப் பலனும் இல்லை. இதுகுறித்து கந்தர்வகோட்டை காவல் அதிகாரி ஒருவரிடம் கூறினேன். அப்போது அவர், பழைய முகவரியை வைத்து ஆதார் எடுக்க உதவினார். ஆனாலும், ஒப்புகைச் சீட்டு மட்டுமே வழங்கப்பட்டது. ஆதார் கார்டு கைக்குக் கிடைக்கவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுப்போட வேண்டும் என்பது எனது ஆசை. எனக்கு 50 வயசுக்கு மேல் ஆக்சு. ஒரு தடவைகூட என்னால ஓட்டுப் போட முடியலை. எந்த ஆவணமும் இல்லாததால் என்னைப் புறக்கணிக்கின்றனர். எனக்கு ஆவணங்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று  தெரிவித்துள்ளார்.