`நல்ல நேரம் முடியறதுக்குள்ள வேட்புமனு தாக்கல் செய்ய அனுப்புங்க!'- அதிகாரிகளிடம் மல்லுகட்டிய அ.தி.மு.க எம்.எல்.ஏ. | Thanjavur candidate fight with officers while coming for nomination

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (26/03/2019)

கடைசி தொடர்பு:12:40 (26/03/2019)

`நல்ல நேரம் முடியறதுக்குள்ள வேட்புமனு தாக்கல் செய்ய அனுப்புங்க!'- அதிகாரிகளிடம் மல்லுகட்டிய அ.தி.மு.க எம்.எல்.ஏ.

அ.தி.மு.க கூட்டணி வேட்பாளரான த.மா.கா-வை சேர்ந்த நடராஜனை  வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளே அனுப்புவதற்கு கால தாமதம் ஏற்பட்டதால் கோபமடைந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ சி.வி.சேகர் நல்ல நேரம் முடியறதுக்குள்ள நாங்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டாமா, உள்ளே விடுறீங்களா இல்லையா என அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் அதிகாரிகளிடம் மல்லுகட்டிய அ.தி.மு.க எம்.எல்.ஏ.

அ.தி.மு.க கூட்டணியில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு போட்டியிடுவதற்கு சுயேச்சைகள் மற்ற கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று தி.மு.க, த.மா.கா வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில்  தி.மு.க.வேட்பாளரான பழனிமாணிக்கம் மதியம் 2 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் அண்ணாதுரையிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தாார். பின்னர் அரைமணி நேரத்திற்கு மேலாக அவருடையை ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன. அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு வந்ததால் குறிபிட்ட நேரத்தை கடந்துதான் தி.மு.க வேட்பாளர் வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் த.மா.க. வேட்பாளர் நடராஜன் மதியம் 2.15 மணியளவில் வந்தார். அவருடன் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ சி.வி.சேகர், கோவிந்தராஜ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் காத்திருப்போர் அறையில் காக்க வைக்கப்பட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் தி.மு.க-வின் மாற்று வேட்பாளரான முன்னாள் அரசு வக்கீல் நமச்சிவாயம் கலெக்டரிடம் வேட்பு மனு தாக்கல் செய்து கொண்டிருந்ததால் தாமதம் ஏற்பட்டது. மணி 2.45 ஆனதால் கோபமடைந்த  பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. சேகர் பாதுகாப்பிற்கு நின்ற போலீஸ் மற்றும் அதிகாரிகளுடன், `நல்ல நேரம் முடிய போகிறது. நாங்களும் நல்ல நேரத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டாமா. உடனே உள்ளே விட முடியுமா, முடியாதா. நீங்கள் போய் கலெக்டரிடம் சொல்றீங்களா, இல்லை நானே உள்ளே போய் சொல்லட்டுமா' என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் மற்றவர்கள் அவரை அமைதிப்படுத்தினர். அதன் பிறகு உள்ளே அனுப்பப்பட்டு சரியாக 2.50 மணியளவில் த.மா.கா வேட்பாளர் நடராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க