`குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவு போட‌முடியாது!'-டி.டி.வி.தினகரனை கைவிட்ட உச்சநீதிமன்றம் | Ready to register as a party says ttv dinakaran in supreme court

வெளியிடப்பட்ட நேரம்: 11:39 (26/03/2019)

கடைசி தொடர்பு:12:49 (26/03/2019)

`குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவு போட‌முடியாது!'-டி.டி.வி.தினகரனை கைவிட்ட உச்சநீதிமன்றம்

அ.ம.மு.க வை இன்றே கட்சியாகப் பதிவு செய்ய தயார் என டி.டி.வி தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலைச் சின்னம் அ.தி.மு.க-வுக்குத்தான் என்று டெல்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து டி.டி.வி தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியது. அதில், டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், அ.ம.மு.க-வுக்குத் தேர்தலில் போட்டியிடும் வகையில் குக்கர் சின்னத்தை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ``அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இதுவரை பதிவு செய்யப்படாத கட்சி. பதிவு செய்யப்படாத கட்சியின் வேட்பாளர்கள் சுயேச்சைகளாகத்தான் கருதப்படுவர். அதனால் அவர்களுக்குக் குக்கர் சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்க முடியாது" எனத் தெரிவித்தனர். இதைக் கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான பிரமாண பத்திரத்தைத் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். தொடர்ந்து நேற்று மாலையே தேர்தல் ஆணையத்தின் சார்பில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 

உச்ச நீதிமன்றம்

தொடர்ந்து இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், ``கட்சியைப் பதிவு செய்யாமல் சின்னம் எப்படிக் கேட்கிறீர்கள். உங்களுக்கு முதலில் குக்கர் சின்னம் எப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் ஏன் குக்கர், இரட்டை இலைச் சின்னங்களை கேட்கிறீர்கள்" என தினகரன் தரப்புக்குக் கேள்வி மேல் கேள்வி எழுப்பினர். இதற்கு அ.ம.மு.க தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில் பதிலளித்தார். ``இரட்டை இலை பற்றி மூலவழக்கு நிலுவையில் இருந்தபோது டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு போட்டு குக்கர் சின்னம் ஒதுக்கியது. அதேபோன்று உச்ச நீதிமன்றமும் தற்போது இடைக்கால உத்தரவு பிறப்பித்து குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும். அ.ம.மு.கவை கட்சியாகப் பதிவு செய்ய தயார். ஆனால், இப்போது தேர்தல் வரவுள்ளதால் அதற்கான நேரம் இல்லை" என கபில் சிபில் வாதாடினார். 

தேர்தல் ஆணையம்

அதற்கு, ``இரட்டை வழக்கு முடிந்துவிட்டதால் பழைய முறைப்படி பொதுச் சின்னம் வழங்க வேண்டியதில்லை" என நீதிபதி கூற, ``அ.ம.மு.கவை இன்றே கட்சியாகப் பதிவு செய்கிறோம். குக்கர் சின்னம் இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு பொதுச் சின்னத்தை அ.ம.மு.கவுக்கு ஒதுக்கி உத்தரவிட வேண்டும்" என டி.டி.வி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணையம், ``கட்சியை இன்றே பதிவு செய்தாலும் உடனடியாக சின்னத்தை ஒதுக்க முடியாது. கட்சியைப் பதிவு செய்து 30 நாள்களுக்குப் பிறகுதான் பொதுச் சின்னம் கொடுப்பதும். அதுதான் விதி. அ.ம.மு.க வேட்பாளர்கள் சுயேச்சை வேட்பாளர்களாக கருதப்பட்டு தனிச் சின்னம் தான் தர முடியும்" என மறுப்பு தெரிவித்தது.

அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ``ஒரே அமைப்பில் உள்ளவர்களுக்கு தனித்தனி சின்னம் வழங்கினால் அவர்களது அரசியல் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும். ஒருவர் எவ்வளவு வலுவுள்ளவராக இருந்தாலும் சின்னம்தான் அவரது அடையாளம். எனவே அமமுக வேட்பாளர்களுக்கு ஒரே சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கலாமே. குக்கர் என்பது இல்லாவிட்டாலும் வேறு எதாவது ஒரு பொதுச் சின்னம் வழங்க முயற்சி எடுக்கலாம்" எனக் கூறினர். 

அப்போது ``இரட்டை இலையை பெறும் முயற்சியில் இரண்டு முறையும் தினகரன் தோற்றுவிட்டார். இனி அவருக்கு இரட்டை இலை கிடையவே கிடையாது. குக்கரை போன்று ஒரு பொதுச் சின்னத்தை தினகரன் தரப்புக்கு ஒதுக்க கூடாது" என ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு வாதிட்டது. 

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அ.ம.மு.கவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்ககோரிய கோரிக்கையை நிராகரித்தனர். தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று தினகரனின் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் காலத்தை கருத்தில் கொண்டு தேர்தல்களில் பொதுச் சின்னத்தை வழங்க பரிசீலிக்க வேண்டும் எனவும், தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடிய டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் 59 பேருக்கும் பொதுச் சின்னம் வழங்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க