அ.தி.மு.க,வுக்கு திடீர் ஆதரவு ஏன்? - சரத்குமார் முடிவை மாற்றியதன் பின்னணி  | The Reason behind sarathkumar's decision to support ADMK

வெளியிடப்பட்ட நேரம்: 12:22 (26/03/2019)

கடைசி தொடர்பு:10:12 (27/03/2019)

அ.தி.மு.க,வுக்கு திடீர் ஆதரவு ஏன்? - சரத்குமார் முடிவை மாற்றியதன் பின்னணி 

 சரத்குமார், ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் சந்திப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி என அறிவித்த சரத்குமார், திடீரென அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்துள்ளார். அதன்பின்னணியில் இரண்டு அமைச்சர்கள் உள்ளனர். 

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி எனச் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்தார். சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் கட்சித் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுத்தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் கட்சித் தலைமை ஈடுபட்டது. இந்தச் சூழ்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சர் ஜெயக்குமாரும் சரத்குமாரைச் சந்தித்துப் பேசினர். அதன்பிறகு தனித்துப் போட்டி என்ற முடிவை சரத்குமார் மாற்றியுள்ளார். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரின் இல்லத்தில் சரத்குமார் சந்தித்து இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சரத்குமார் தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

சரத்குமார் - பழனிசாமி

இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டதற்கு, ``கட்சி நிர்வாகிகளுடன் சரத்குமார் ஆலோசனை நடத்தி தனித்துப் போட்டி என்ற முடிவை எடுத்தார். இந்தச் சமயத்தில்தான் அ.தி.மு.க.விடமிருந்து எங்களுக்கு அழைப்புவந்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சர் ஜெயக்குமாரும் சரத்குமாரைச் சந்தித்துப் பேசினர். அப்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவளிக்கவேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தனர். அதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்துவிட்டு முடிவு சொல்வதாக தலைவர் தெரிவித்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு கட்சி நிர்வாகிகளிடம் தலைவர் ஆலோசனை நடத்தினார். அப்போதுதான் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்துதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆதரவை சரத்குமார் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்யவுள்ளார். இதனால் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்காக ச.ம.க பாடுபடும்" என்றார். 

 சரத்குமார், ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் சந்திப்பு

அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகி ஒருவரிடம் கேட்டதற்கு, ``அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பிரசாரம் செய்ய நட்சத்திரப் பேச்சாளர்கள் இருந்தாலும் சரத்குமார் இந்தக் கூட்டணிக்குப் பிரசாரம் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம். இதனால் சரத்குமாரைச் சந்தித்து வேண்டுகோளை விடுத்தோம். அவரும் நல்ல முடிவை எடுத்துள்ளார். எங்களுக்கு சரத்குமார் ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளதால் அ.தி.மு.க.வின் மெகா கூட்டணிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. அவர்  பிரசாரம் செய்யும் இடங்கள் குறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும்" என்றார். 

 நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானதும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தி.மு.க.வும் அ.தி.மு.கவும் பிஸியாக இருந்தது. ஆனால், சமத்துவ மக்கள் கட்சியுடன் வெளிப்படையாக எந்தக் கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் இந்தத் தேர்தலில் ச.ம.க. தனித்துப் போட்டி என்ற அறிவிப்பை சரத்குமார் வெளியிட்டார். அதன்பிறகும் வெளிப்படையாக ச.ம.க.வை யாரும் அழைத்துப் பேசவில்லை. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி இறுதியான பிறகுதான் அ.தி.மு.க. தரப்பிலிருந்து சரத்குமாருக்கு இந்தத் தேர்தலில் நீங்கள் தனித்துப் போட்டியிட வேண்டாம். அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளியுங்கள் என்று தூதுவந்துள்ளது.

சரத்குமார்

அப்போது ச.ம.க. தரப்பிலிருந்து ஒரு தொகுதி வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அப்போது தொகுதி உடன்பாடுகள் முடிவடைந்துவிட்டன. அ.தி.மு.க. கூட்டணிக்கு நீங்கள் பிரசாரம் செய்யுங்கள். உங்களுக்கு வேண்டியதை நாங்கள் செய்கிறோம் என்ற உறுதிமொழி கொடுக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் சரத்குமார் ஆலோசித்த பிறகுதான் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலிலும் இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றால் ராஜ்ய சபா எம்.பி.யாகுவார் சரத்குமார் என்று சொல்லப்படுகிறது.