"அமைதியான வேட்பாளர்; கடன் வாங்காத பிரதமர்; தனித் தேர்தல் அறிக்கை!"- கோவை வேட்பாளர்களின் அதிரடி | Coimbatore candidates filed nominations

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (26/03/2019)

கடைசி தொடர்பு:10:12 (27/03/2019)

"அமைதியான வேட்பாளர்; கடன் வாங்காத பிரதமர்; தனித் தேர்தல் அறிக்கை!"- கோவை வேட்பாளர்களின் அதிரடி

கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் பி.ஆர். நடராஜன்

சி.பி.எம்  வேட்பாளர் பி.ஆர்.நடராஜன், பா.ஜ.க வேட்பாளர்  சி.பி.ராதாகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் டாக்டர் மகேந்திரன் உள்ளிட்ட  கோவை நாடாளுமன்றத் தொகுதியின் பிரதான வேட்பாளர்கள்,  கோவை மாவட்ட ஆட்சியரிடம்  நேற்று  தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல்செய்தனர். 

 

பி.ஆர். நடராஜன் கோவை நாடாளுமன்றத் தொகுதி சி.பி.எம் வேட்பாளர்

"அமைதியான வேட்பாளர்!"

வேட்புமனு தாக்குதலுக்குப் பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சி.பி.எம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்,  "கோவை நாடாளுமன்றத் தொகுதியின் அமைதி வேட்பாளராக உள்ளேன். அமைதி பாதுகாக்கப்பட்டால் மட்டுமே கோவையின் வளர்ச்சி உத்தரவாதப்படுத்தப்படும். கோவை நகர சிறு குறு தொழில்கள் ஜிஎஸ்டி-யால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதை நான் சொல்லவில்லை. தமிழக தொழில்துறை அமைச்சரே, 50,000 தொழில் நிறுவனங்கள் பாதித்து  50 லட்சம் பேர் பாதித்துள்ளதாக சட்டமன்றத்தில்  குறிப்பிட்டுள்ளார். கோவையில் குடிநீர் விநியோக உரிமை தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டிருப்பதைக்  கண்டிக்கிறோம். விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும்.  வளர்ச்சித் திட்டங்களுக்காக  ஏன் விவசாயிகள் மட்டுமே தியாகம்செய்து கொண்டிருக்க வேண்டும். அதற்கு மாற்று ஏற்பாடு செய்வேன்.  கல்விக் கடன்களை முழுமையாக ரத்துசெய்யும் பணியை மேற்கொள்வதுடன், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். 

மேற்குத் தொடர்ச்சி மலை இயற்கை கொடுத்த கொடை. அங்கு, வன விலங்குகளின் வழித்தடங்கள்  பறிக்கப்படக் கூடாது. வனப்பகுதி ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் அகற்றப்பட வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாக்கப்பட வேண்டும். பணப்பட்டுவாடா செய்யப்பட்டால், தேர்தல் கமிஷன் கவனத்திற்குக் கொண்டுசெல்வோம். மிகப்பெரும் பண பலத்துடன் ஆளும்கட்சி  தேர்தலைச் சந்திக்க உள்ளனர். அதைத் தடுக்க முயற்சிசெய்வோம். பொள்ளாச்சி சம்பவம், கோவை மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. அவ்வழக்கில் தொடர்புடைய அரசியல்வாதிகள்,  உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும். ஏழு ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட இளம் பெண்களைக் கணக்கில் எடுத்து, அவர்களின் மரணம் தொடர்பாக விசாரிக்க வேண்டும். கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தியுள்ள ஆட்சி அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு,  எனது தேர்தல் பரப்புரை இருக்கும். பண மதிப்பிழப்பு சமையத்தில், சேகர் ரெட்டி வீட்டில் பணம் அடுக்கிவைத்தது அனைவருக்கும் தெரியும். மோடி அரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.  நான்  நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது,  30 ஆண்டுகள் இல்லாத வகையில் முதல் முறையாக 8 புதிய ரயில்களைக் கொண்டுவந்ததோடு மட்டுமல்லாமல், போத்தனூர் வழியாகச் சென்ற 5 ரயில்களையும் கோவை வழியாகத்  திருப்பினோம். நான் நடாளுமன்ற உறுப்பினரானால், கோவை பெங்களூரு இரவுநேர ரயில் கண்டிபாக இயக்கப்படும்" என்றார். 

 

கோவை நாடாளுமன்றத் தொகுதியின் பி.ஜே.பி வேட்பாளர் சி.பி.நடராஜன்

"கடன் வாங்காத பிரதமர்!"

பா.ஜ.க-வின் கோவை  வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, "ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலமே தேர்தல்கள் உரிய நேரத்தில், உரிய முறையில் நடத்தப்படுவதுதான். கடந்த காலங்களில் இருந்த சின்னச்சின்ன தவறுகள், தேர்தல் கமிஷனால் ஒன்றன்பின் ஒன்றாக சரிசெய்யப்பட்டுவருகிறது. அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டனி 40 இடங்களிலும் வெற்றிபெறும் என்ற எண்ணம் மக்களிடம் மேலோங்கியுள்ளது. நிலையான ஆட்சி மத்தியில் இல்லையென்றால், தேசத்தின் முன்னேற்றம் தடைபட்டுவிடும். ஒருமித்த கருத்தும் சிந்தனையும்தான் அ.தி.மு.க கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பைப் பெற்றுத்தரும். மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சிக்காலம், விலைவாசி உயர்வே இல்லாத காலமாக உள்ளது. உலகத்தைக் கண்டு இந்தியா பயப்படாமல் இருப்பது மட்டுமல்லாமல், இந்தியா என்ன கருத்தை முன்வைக்கிறது என்று உலக நாடுகள் உற்றுநோக்கும் அளவுக்கு மோடி நம் தேசத்தை உயர்த்தியுள்ளார். கடந்த ஐந்தாண்டு காலத்தில், உலக வங்கியில் கடன் வாங்காத பிரதமர் என மோடி பெயர்பெற்றுள்ளார். கோடானு கோடி மக்களுக்கு இலவச கேஸ், கழிவறை, மின் இணைப்பு தரப்பட்டுள்ளது. 2024-க்குள் 'அனைத்து குடும்பங்களுக்கும் வீடு' திட்டம் நிறைவேற்றப்படும். 

ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் தென்னிந்திய நதி இணைப்பை மத்திய அரசிடம் எடுத்து வைத்துள்ளனர். மோடி ஆட்சி வரும்போது, கோதாவரி காவிரியுடன் இணைக்கப்பட்டு, தமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்னை முழுமையாக தீர்க்கப்படும்.40 இடங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டனி வெல்லும்.  கோவை தொகுதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவோம். அவிநாசி சாலையில் அமைக்கப்பட உள்ள  மேம்பாலம் நீலாம்பூர் வரை நீட்டிக்கப்படும். அடுத்த 10ஆண்டுகளுக்கு போக்குவரத்து நெருக்கடி என்பதே கோவையில் இருக்காது. மேட்டுப்பாளையம் சாலையை அகலப்படுத்துவதோடு, தேவைப்படும் இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்படும். ரயில் வசதியை பெருக்குவோம். தென் தமிழகத்தில் அதிக ரயில் போக்குவரத்தை ஏற்படுத்துவோம். மோடி வந்த பிறகுதான் அதிக மின்பாதை உருவாகியிருக்கிறது. முதல்வர், துணை முதல்வர், பிரதமர் உள்ளிட்டோர் பிரசாரத்திற்காக கோவைக்கு வருவார்கள். பிரேமலதா கோவை நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வார்கள். வாசன், அன்புமணி ராமதாஸ் என கூட்டணிக்கட்சி தலைவர்கள் எல்லோரும் வருவார்கள்.  கோவை மாநகருக்கு விரைவில் மெட்ரோ ரயில் கொண்டுவரப்படும். விமான நிலையம் விரிவுபடுத்தப்படாததுதான் தொழில் வளர்ச்சிபெறாமல் இருப்பதற்கான காரணம். எங்கும் இல்லாத அளவுக்கு கோவை விமான நிலையம் விரிவுபடுத்தப்படும். சிறு குறு தொழில்கள்மீது அக்கறையுள்ள  அரசாக மக்திய அரசு செயல்படுகிறது. தற்போதுள்ள சிரமங்கள் கண்டறியப்பட்டு களையப்படும். அவர்களுக்கான ஆதரவு முன்பைவிட அதிக அளவு இருக்கும்" என்றார்.

கோவை நாடாளுமன்றத் தொகுதியின் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மகேந்திரன்

 "தனித் தேர்தல் அறிக்கை!"

இறுதியாக,  மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக, கோவைத் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன், "ஒரு மாதத்தில் மக்கள் நீதி மய்யத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. கோவை பொதுக்கூட்டம் அதை உறுதிப்படுத்தியுள்ளது. கோவைப் தொகுதிக்கு தனித் தேர்தல் அறிக்கை வெளியிடுவோம். மேற்கு மண்டல காவல்துறை அதிகாரி ஒருவர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக கமல்ஹாசன் கூறிய புகார்குறித்து  இதுவரை புகார் அளிக்கவில்லை. இனிமேலும் தொடர்ந்தால், புகார் அளிப்போம். பொள்ளாச்சியில் மட்டுமில்லாமல்,  தமிழகம் முழுவதும்  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வலுவான குரல் எழுப்புவோம்" என்றார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க