`மாலையில் விளையாடினார், காலையில் சடலமாகக் கிடந்தார்!'‍ - துடியலூர் சிறுமிக்கு நடந்த கொடுமை | 7 year old child murdered in Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (26/03/2019)

கடைசி தொடர்பு:13:23 (26/03/2019)

`மாலையில் விளையாடினார், காலையில் சடலமாகக் கிடந்தார்!'‍ - துடியலூர் சிறுமிக்கு நடந்த கொடுமை

கோவை அருகே, ஏழு வயது பள்ளிச் சிறுமி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், உடலில் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். 

சிறுமி

கோவை துடியலூரை அடுத்த பன்னனீர்மடை கஸ்தூரிநாயக்கன்புதூர் பகுதியில் வசித்துவரும் தம்பதிக்கு, 5 மற்றும் 7 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஏழு வயது பெண்குழந்தை, அருகில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய குழந்தை, வீட்டின் அருகே விளையாடியுள்ளது. மாலை 6 மணியாகியும் அந்தக் குழந்தை வீடு திரும்பவில்லை. இதனால்  அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கம் தேடியுள்ளனர். ஆனால், குழந்தை கிடைக்காததைத் தொடர்ந்து தடாகம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீஸார், இரவு 2 மணி வரை தேடியுள்ளனர். இந்நிலையில், இன்று காலை 7.30 மணியளவில், அந்தப் பகுதியில் ஓர் சிறிய சந்தில் டி-ஷர்ட்டில் சுற்றப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு வந்து பார்த்தபோது, முகம் மற்றும் உடல் முழுவதும் காயங்களுடன் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது.

சிறுமியின் தாய்

இதையடுத்து, உடற்கூறு பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி மற்றும் தடய அறிவியல் துறையினர், குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதா என விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதனிடையே, பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், இதற்குக் காரணமாவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் சிறுமி உயிரிழப்பு குறித்து அவரது உறவினர்கள் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.