"அதை நினைச்சுதான் பயப்பட வேண்டியிருக்கு"- கண்கலங்கும் சாதிக் பாட்ஷாவின் மனைவி | ''they started to attack us directly now'' says saadhik badsha wife

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (26/03/2019)

கடைசி தொடர்பு:13:35 (26/03/2019)

"அதை நினைச்சுதான் பயப்பட வேண்டியிருக்கு"- கண்கலங்கும் சாதிக் பாட்ஷாவின் மனைவி

''அதிகார பலம் என் கணவரை தற்கொலை செய்யத் தூண்டியிருக்கு. என் கணவரோட தற்கொலைக்குக் காரணமானவங்க எல்லாரும் தங்களை குற்றமற்றவர்களாகக் காட்டிக்கிட்டு இந்த சமூகத்துல வாழ்ந்துட்டிருக்கும்போது, நானும் என் மகன்களும் அவரை இழந்ததோடு மட்டுமல்லாம, தினம் தினம் பயத்தோடும் பரிதவிப்போடும் வாழ்ந்துட்டிருக்கோம்'' என கண்ணீரும் கோபமுமாகப் பேசுகிறார், சாதிக் பாட்சாவின் மனைவி ரெஹா பானு.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 16-ம் தேதி, சாதிக் பாட்சாவுக்கு அவரின் குடும்பத்தினர் நினைவஞ்சலி நடத்துகிறார்கள். இந்த ஆண்டு நினைவஞ்சலிக்கு அடுத்த மூன்று தினங்களுக்குள், ரெஹா பானு சென்ற கார்மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்ற வாசகம் நினைவஞ்சலி போஸ்டரில் இடம் பெற்றிருந்ததுதான் அதற்குக் காரணம் என்றார் ரெஹா பானு. அவரைத் தொடர்பு கொண்டோம். கடந்த எட்டு ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்க விரும்பாத ரெஹா பானு, முதல்முறையாக விகடனிடம் தன் உணர்வுகளைப் பகிர முன் வந்தார். 

சாதிக் பாட்ஷா

 

"பயத்தோடுதான் வாழ்ந்துட்டு இருக்கிறோம். என் பசங்க ரெண்டு பேரும் சின்னவங்க. அவங்களுக்கு இதைப் பத்தியெல்லாம் எதுவும் தெரியாது. இதுநாள் வரையிலும் சின்னவன்கிட்ட அப்பா வெளிநாட்டுக்குப் போயிருக்கிறதா சொல்லி வெச்சிருந்தோம்.  இப்போ அவனுக்கும் அப்பா இல்லைங்கிற விவரம் புரிய ஆரம்பிச்சிடுச்சு. அப்பா எப்போ வருவாருனு கேட்குறதுக்கு பதிலா, ஏன் எனக்கு மட்டும் அப்பா இல்லைனு கேட்க ஆரம்பிச்சிட்டான். பார்க்ல போய் தனியா உட்காந்து அழுதுட்டு இருக்குறான். என்னோட அம்மா என்னையும் தம்பியையும் சிங்கிள் மதராதான் வளத்தாங்க. இப்போ, அதே நிலைமை என் பசங்களுக்கும் வந்துடுச்சு. ஆனாலும், இந்த எட்டு வருஷமும் என் அம்மாவும் தம்பியும்தான் எனக்கு பக்கபலமா இருக்காங்க.

தம்பி ஒருநாள்கூட எங்களை தனியா விட்டுட்டுப் போனதே இல்லை. என் ரெண்டு பசங்களுக்கும் அவங்கதான் எல்லாமே. அவங்ககூட இருந்தாலும், என் கணவர் இல்லாத குறை எப்போதுமே எனக்கு உண்டு. குழந்தைங்களை சிங்கிள் பேரன்ட்டா வளர்க்குறது ரொம்ப கஷ்டம். அந்த பாதிப்பு அவங்களோட சின்னச்சின்ன விஷயங்கள்லயும் கலந்திருக்கும். ஆனாலும் வேற வழியில்லை. இனி முடிஞ்சவரை ஒரு அம்மாவா அவங்களுக்கு என்னோட பெஸ்டன்டைக் கொடுக்க முயற்சி பண்ணுவேன். ஒருபக்கம் ஒரு அம்மாவா பாசத்தையும், இன்னொரு பக்கம் அவங்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை ஏற்படுத்தித் தர்றதுக்கான போராட்டத்தையும் தாங்கிக்கிட்டிருக்கிறேன். இதுநாள் வரை எங்களை மறைமுகமா தாக்கியவங்க, இப்போ நேரடியாவே தாக்க ஆரம்பிச்சிருக்காங்க. அதை நினைச்சுதான் பயப்பட வேண்டியதிருக்கு. எனக்கு நிச்சயமா நம்பிக்கை இருக்கு. இந்த நிலைமை எல்லாம் ஒருநாள் சரியாகும். நானும் என் பிள்ளைகளும் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்வோம்னு. ஆனா, அது எப்போன்னுதான் இப்போ வரை தெரியலை.