`உரிய ஆவணம் இல்லை, போய் எடுத்துட்டு வாங்க!'- கமல் கட்சி வேட்பாளரை திருப்பி அனுப்பிய அதிகாரிகள் | Makkal neethi maiyam Candidate filed nomination with error

வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (26/03/2019)

கடைசி தொடர்பு:14:05 (26/03/2019)

`உரிய ஆவணம் இல்லை, போய் எடுத்துட்டு வாங்க!'- கமல் கட்சி வேட்பாளரை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர், உரிய ஆவணங்கள் இன்றி வேட்பு மனு தாக்கல்செய்ய வந்தார். அவரை அதிகாரிகள் திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மக்கள் நீதி மையம்  கட்சியின் வேட்பாளர்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. நீலகிரி தனித் தொகுதியில் தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், சுயேச்சை எனப் பலர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று கடைசி நாள் என்பதால், இறுதிக்கட்ட வேட்புமனு தாக்கல் நடைபெற்றுவருகிறது. இந்தத் தேர்தலில், முதல் முறையாக  மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது. நீலகிரி தனித் தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் வழக்கறிஞர் ராஜேந்திரன் போட்டியிட உள்ளார். இன்று வேட்பு மனு தாக்கல்செய்ய நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தொண்டர்களுடன் வந்தார்.

மக்கள் நீதி மையம்  கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன்

வேட்புமனு தாக்கல் காலை 11 மணிக்கு தொடங்கும். ஆனால், இவர்கள் 10.30 -க்கு வளாகத்திற்குள் வந்தனர். கலெக்டரை சந்தித்து வேட்பு மனு அளிப்பதற்கு முன்பு ஆவணங்கள் சரிபார்க்கப்படும். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் வேட்பாளரின் ஆவணங்களும் சரி பார்க்கப்பட்டன. அதில் உரிய ஆவணங்கள் இல்லை. போய் அனைத்தையும் எடுத்துவாங்க என அதிகாரிகள் அனுப்பிவைத்தனர். வந்த வேகத்தில் சென்றுவிட்டனர். வேட்புமனு தாக்கல்செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில், வழக்கறிஞரே இப்படி வேட்பு மனுவில் சொதப்பலாமா என அதிகாரிகள் நகைத்தனர்.