``பட்டாசுத் தொழில் நசிவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்!” - வேட்புமனு தாக்கல்செய்த மாணிக்கம் தாகூர் | congress candidate filed nomination

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (26/03/2019)

கடைசி தொடர்பு:14:50 (26/03/2019)

``பட்டாசுத் தொழில் நசிவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்!” - வேட்புமனு தாக்கல்செய்த மாணிக்கம் தாகூர்

பட்டாசு, கைத்தறி தொழில் நசிவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் என விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

தி.மு.க கூட்டணியில், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானத்திடம் வேட்புமனு தாக்கல்செய்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர் சஞ்சய்தத், தி.மு.க வடக்கு மாவட்டச் செயலர் தங்கம் தென்னரசு, மதுரை தெற்கு மாவட்டச் செயலர் மணிமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மாணிக்கம்தாகூர்

அப்போது, மாணிக்கம் தாகூர் பேசியது, ``ஒருபுறம் காந்தியின் கொள்கை; மறுபுறம் கோட்சேயின் கொள்கைகளுக்கான தேர்தல் இது. இந்திய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் கும்பல் ஒருபுறம் உள்ளது. இந்தியா என்ற எண்ணமே தற்போது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. மோடியின் தலைமையில், கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் விரோத செயல்கள் அரங்கேறியுள்ளன. விவசாயம், சிறுதொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி, 5 பேருக்கு மட்டும் பாதுகாப்பாக உள்ள மோடி அரசுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் தேர்தல் இது. மோடியின் குற்றத்தை மட்டும் சொல்லி வாக்கு சேகரிக்க மாட்டோம். மிக முக்கிய திட்டங்களை நாங்கள் முன்வைத்துள்ளோம்.

மாணிக்கம்தாகூர்

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், சத்தீஷ்கர் மாநிலங்களில், விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என ராகுல் காந்தி அறிவித்தார். இதுவரை அவர் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் விவசாயக் கடன் தள்ளுபடிசெய்யப்படும். சிறுதொழில்களைப் பாதுகாக்க ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி கொண்டுவரப்படும். ஒவ்வொரு இந்தியனுக்கும் வருமான உத்தரவாத சட்டம் கொண்டுவரப்படும். இதை மையப்படுத்தி பிரசாரம் செய்ய உள்ளோம். பட்டாசு, கைத்தறித் தொழில் கேள்விக்குறியாகியுள்ளது. தொழில் மாவட்டமான விருதுநகர் மாவட்டம், இன்று தலைகுனிந்து நிற்கும் நிலைக்குக் கொண்டுவந்ததுதான் மோடி- எடப்பாடியின் சாதனை. மக்கள் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்” என்றார்.