`புனித நீர் எடுக்க காவிரிக்குச் சென்றனர்!'- ஒருவர் தப்பினார்; 3பேர் தண்ணீரில் உயிரிழந்த பரிதாபம் | Three of the people who went to took water for the festival were drowned in cauvery river

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (26/03/2019)

கடைசி தொடர்பு:15:15 (26/03/2019)

`புனித நீர் எடுக்க காவிரிக்குச் சென்றனர்!'- ஒருவர் தப்பினார்; 3பேர் தண்ணீரில் உயிரிழந்த பரிதாபம்

கரூர் மாவட்டத்தில் கோயில் திருவிழாவுக்குப் புனித நீர் எடுக்கப் போனவர்களில் மூன்று பேர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

3 பேர் உயிரிழந்த பகுதி

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் இருக்கும் காருடையாம்பாளையம் அருகில் உள்ள வால்நாயக்கன்பட்டி பகவதி அம்மன் கோயில் திருவிழா வருடாவருடம் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த வருடமும் அந்தக் கோயிலில் வெகுசிறப்பாக நடத்தப்படுகிறது. அந்தத் திருவிழாவின் ஒருபகுதியாக, காவிரி ஆற்றில் தண்ணீர் எடுப்பதற்கு பரமத்தி கிராமத்தைச் சேர்ந்த 2000 பேர் கரூர், ஈரோடு மாவட்டங்களின் காவிரி ஆறு எல்லைப் பகுதியான நொய்யல் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் தண்ணீர் எடுக்க, 20 கிலோ மீட்டர் நடைபாதையாக வந்து, காவடி எடுப்பது மூன்று தலைமுறையாக வழக்கத்தில் உள்ளது. அதன்படி, காவிரி ஆற்றில் தண்ணீர் எடுக்க வந்த நால்வர் தவறுதலாக தண்ணீருக்குள் இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக மணல் அள்ளி ஆழமாக இருந்த பகுதியில் சென்றதால், புதைமணலில் சிக்கிக்கொண்டனர்.

உயிரிழந்த இடத்தில் போலீஸார் விசாரணை

இதைக் கண்டவர்கள் ஒருவரை மட்டும் உயிரோடு மீட்டனர். பின்னர் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்குத் தகவல் அளித்தனர். விரைந்துவந்த தீயணைப்புத் துறை வீரர்கள், நீருக்குள் மூழ்கிய மூவரை தேடினர். இதில், பரமத்தி அருகே உள்ள புதுக்க நல்லியைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் நவீன்குமார், காருடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தேவராஜன் மகன் புருஷோத்தமன் ஆகிய இருவரின் உடல்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்கபட்டு, கொடுமுடி அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், காருடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மகன் பிரபாகரன். தண்ணீரில் மூழ்கிய இவரை தீயணைப்புத் துறையினரின் நீண்ட தேடலுக்குப் பிறகு கண்டுபிடித்து மீட்டனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தால் ஒரு கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.