‘என்னுடைய சொத்து ரூ.115 கோடி; நிலுவையில் 2 குற்ற வழக்குகள்!'- வேட்புமனுவில் ஜெகத்ரட்சகன் தகவல் | Jagatrakshakan's property worth Rs.115 crores

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (26/03/2019)

கடைசி தொடர்பு:10:16 (27/03/2019)

‘என்னுடைய சொத்து ரூ.115 கோடி; நிலுவையில் 2 குற்ற வழக்குகள்!'- வேட்புமனுவில் ஜெகத்ரட்சகன் தகவல்

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி, தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு ரூ.115 கோடி என்று வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வேட்புமனு தாக்கல் செய்த தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க சார்பில் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார். அவர், நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவில், தனக்கு ரூ.115 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகக் கூறியுள்ளார். ஜெகத்ரட்சகன் பெயரில், ரூ.2 கோடியே 63 லட்சத்து 43 ஆயிரத்து 519 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.10 கோடியே 99 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளன. அவரின் மனைவி அனுசுயா பெயரில் ரூ.43 கோடியே 16 லட்சத்து 29 ஆயிரத்து 747 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.57 கோடியே 91 லட்சத்து 4 ஆயிரத்து 631 மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளன.

மேலும், ஜெகத்ரட்சகன் மனைவியின் பெயரில், 16 கோடியே 63 லட்சத்து 65 ஆயிரத்து 972 ரூபாய் கடன் தொகை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஜெகத்ரட்சகன் மீது இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டரில் கணக்கு வைத்திருக்கவில்லை. சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக் மட்டும் பயன்படுத்துவதாக, வேட்புமனுவில் அவர் தெரிவித்துள்ளார்.