`மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டால் நான் வெற்றிபெறலாம்!' - சுயேச்சை வேட்பாளர் | 'If people sympathize, I can succeed!' says Independent candidate

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (26/03/2019)

கடைசி தொடர்பு:18:00 (26/03/2019)

`மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டால் நான் வெற்றிபெறலாம்!' - சுயேச்சை வேட்பாளர்

50 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த தேர்தல் மன்னன் 51-வது முறையாக கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார்.

நாகூர் மீரான் பீர்முகம்மது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த புகைப்படக் கலைஞர் நாகூர் மீரான் பீர்முகமது (59). இவர் கடந்த 1989-ம் ஆண்டு முதல் இதுவரை 50 முறை தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனால் அவர் தேர்தல் மன்னன் என அழைக்கப்படுகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து காங்கேயம், ஆர்.கே.நகர் தொகுதிகளில் போட்டியிட்டார். முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், முன்னாள் கேரள முதல்வர் கருணாகரன் உள்ளிட்டோரை எதிர்த்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். 18 முறை சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார். 32 முறை நாடாளுமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார்.

நாகூர் மீரான் பீர்முகம்மது

இந்த நிலையில், தற்போது கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் 51-வது முறையாக போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு நாகூர் மீரான் பீர்முகம்மது செய்தியாளர்களிடம் கூறுகையில், ``ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிட உள்ளேன். தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடுமாறு பலர் என்னை அணுகினார்கள்.

நாகூர் மீரான் பீர்முகம்மது

ஆனால், அதை தவிர்த்துவிட்டு சுயேச்சையாகவே போட்டியிடுகிறேன். தொடர்ந்து சுயேச்சையாக போட்டியிடுவதில் உறுதியாகவும் உள்ளேன். தேர்தல்களில் போட்டியிட நாமினேசன் செலுத்துவதற்காக சொத்துகளை விற்று, இதுவரை 20 லட்சம் ரூபாய் இழந்துள்ளேன். பொதுமக்களுக்கு திடீரென என் மீது அனுதாபம் ஏற்பட்டு, என்னை வெற்றிபெறச் செய்ய வாய்ப்பு உள்ளது. என்னை மக்கள் வெற்றிபெறச் செய்தால் குமரி மாவட்டத்தில் ரப்பர் தொழிற்சாலை, சர்வதேச விமான நிலையம், துறைமுகம் ஆகியவற்றைக் கொண்டு வருவேன். இனிவரும் காலங்களிலும் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவேன்" என்றார்.