ரீசார்ஜ் செய்யாமல் தொடர்புகொண்டதால் நாட் ரீச்சபில்! - விஜயபாஸ்கர் கிண்டலுக்கு கார்த்தி சிதம்பரம் பதில் | Karthi chidambaram replies vijayabaskar

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (26/03/2019)

கடைசி தொடர்பு:10:17 (27/03/2019)

ரீசார்ஜ் செய்யாமல் தொடர்புகொண்டதால் நாட் ரீச்சபில்! - விஜயபாஸ்கர் கிண்டலுக்கு கார்த்தி சிதம்பரம் பதில்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போனை ரீசார்ஜ் செய்து என்னைத் தொடர்புகொண்டு இருக்க வேண்டும். அவர் போனை ரீசார்ஜ் செய்யாமல் தொடர்புகொண்டதால், நாட் ரீச்சபில் என்று வந்திருக்கும் என விஜயபாஸ்கரின் கிண்டல் பேச்சுக்கு கார்த்தி சிதம்பரம் பதிலளித்தார்.

கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் புதுக்கோட்டை தி.மு.க அலுவலகத்தில் நடந்தது. அதில், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,  ``தமிழகத்தில் நடப்பது கோமாளித்தனமான அரசாங்கம். இந்த அரசாங்கம் நேரடியாக மக்களைச் சந்தித்து வாக்குகளைப் பெறவில்லை. கடந்த தேர்தலில் ஜெயலலிதா முதலமைச்சராக வர வேண்டும் என்றுதான் மக்கள் வாக்களித்தார்கள். ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆள வேண்டும் என்று வாக்களிக்கவில்லை. தற்போதைய அரசாங்கம் பா.ஜ.க-வின் பினாமி அரசாங்கமாகத்தான் இருக்கிறது. இந்தக் கட்சியை ஏ.டி.எம்.கே என்று சொல்ல முடியாது மோடி.எம்.கே என்றுதான் சொல்ல வேண்டும். நடக்கும் 18 இடைத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 18 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெற்று மே 23-ம் தேதி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என்று முழுமையாக நம்புகிறேன். என் அப்பாவுக்கு நான் மகனாகப் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன். குறிப்பாக, பொருளாதார ரீதியாக மத்தியில் ஆளும் பா.ஜ.க செய்யும் குளறுபடிகளை அப்பா சுட்டிக் காட்டுகிறார். அதற்கு அவர்களால் பதில் கூறமுடியவில்லை.

எங்களை ஒடுக்குவதற்காக, பொய்யான வழக்குகளைப் போடுகின்றனர். என் அப்பா மீது அரசாங்கத்துக்கு உள்ள அரசியல் ரீதியான கோபத்தால் என்மீது வீண்பழி சுமத்தப்படுகிறது. மற்றபடி, நானும் என் அப்பா ப.சிதம்பரமும் எந்தத் தவறும் செய்யவில்லை. அகில இந்திய காங்கிரஸ் கட்சியால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் நான். காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைத்து அமைப்புகளும் என்னை ஆதரிக்கின்றனர். என்னை வாரிசு அரசியல்வாதி என்று கூறுவது தவறாகும். நான் கடந்த 1996-ல் தொடங்கி தற்போது சந்திக்க இருப்பது 11-வது தேர்தல். பூத் சிலிப் எழுதுவதில் துவங்கி பூத் ஏஜென்ட், வேட்பாளர் ஏஜென்ட் கடைசியில் வேட்பாளர் என பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளேன். எப்போதெல்லாம் காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி சேர்ந்து இருக்கிறதோ அப்போதெல்லாம் வெற்றிதான். எதிரணி குறித்து எந்தக் கவலையும் இல்லை. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். பா.ஜ.க சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் ஹெச்.ராஜா யார் என்பதே எனக்குத் தெரியாது. என்னுடைய இனிய நண்பர் விஜயபாஸ்கர் போனை ரீசார்ஜ் செய்து என்னைத் தொடர்புகொண்டு இருக்க வேண்டும். அவர் போனை ரீசார்ஜ் செய்யாமல் தொடர்புகொண்டதால், நாட் ரீச்சபில் என்று வந்திருக்கும்" என்றார்.