``பாரதிய ஜனதா கட்சிக்கும் சேர்த்தே பிரசாரம் செய்வேன்!'' - சரத்குமார் திட்டவட்டம் | i'm also campaign for BJP also says smk sarathkumar

வெளியிடப்பட்ட நேரம்: 17:24 (26/03/2019)

கடைசி தொடர்பு:17:24 (26/03/2019)

``பாரதிய ஜனதா கட்சிக்கும் சேர்த்தே பிரசாரம் செய்வேன்!'' - சரத்குமார் திட்டவட்டம்

பாரதிய ஜனதா கட்சிக்கும் சேர்த்தே பிரசாரம் செய்வேன் என்று தெரிவித்திருக்கிறார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.

                                                   சரத்குமார்

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் ஏழு கட்டமாக நடக்கவுள்ள இந்தத் தேர்தலில், தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்டக் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், சமத்துவ மக்கள் கட்சி இந்தத் தேர்தலை தனியாக எதிர்கொள்ளும் என்றிருந்த நிலையில், திடீரென அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பின்போது அக்கட்சியின் தலைவர் சரத்குமார் பேசுகையில், ``தனித்துப் போட்டி என்றிருந்த நிலையில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். அவர்களுக்காகப் பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.

                                                             சரத்குமார்
``மோடிக்கு எதிராகப் பேசிவிட்டு தற்போது மோடிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வீர்களா?'' என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, ``சமத்துவம், சகோதரத்துவம், சிறுபான்மையினர் பாதுகாப்பு உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தித்தான் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். அதை அவர்கள் பின்பற்றுவார்கள். தேர்தல் பிரசாரம் என்றாகிவிட்டது. அதில் எந்தக் கட்சியாக இருந்தால் என்ன.. அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, பா.ஜ.க என எல்லாக் கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்த்தே பிரசாரம் செய்வேன்'' என்றார்.