முதல் நாள் கை வண்டி; கடைசி நாள் குதிரை - கோவை தேர்தல் மன்னன் நூர் முகமதுவின் வேட்புமனுத் தாக்கல் ஸ்டைல்! | Coimbatore independent candidate files nomination

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (26/03/2019)

கடைசி தொடர்பு:10:22 (27/03/2019)

முதல் நாள் கை வண்டி; கடைசி நாள் குதிரை - கோவை தேர்தல் மன்னன் நூர் முகமதுவின் வேட்புமனுத் தாக்கல் ஸ்டைல்!

கோவையைச் சேர்ந்த நூர் முகமது குதிரையில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

நூர் முகமது

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். தமிழகத்தில் அ.ம.மு.க-வை தவிர மற்ற பிரதான கட்சிகள் நேற்று வரை வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட்டன. இந்நிலையில், அ.ம.மு.க மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். அதன்படி, அ.ம.மு.க கோவை வேட்பாளர் அப்பாதுரை, கோவை பாராளுமன்றத் தொகுதி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராசாமணியிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதேபோல, தேர்தல் மன்னன் என்றழைக்கப்படும் சுயேச்சை வேட்பாளர் நூர் முகமது குதிரையில் வந்து கோவை தொகுதிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தார். ஏற்கெனவே, ஆண்டிபட்டி, ஆர்.கே.நகர் தொடங்கி 28 தேர்தல்களில் களம் கண்டிருக்கிறார் நூர் முகமது. எந்த தேர்தலாக இருந்தாலும், தள்ளுவண்டி, குதிரை, சைக்கிள் என்று வித்தியாசமாக வந்து வேட்புமனுத் தாக்கல் செய்வது நூர் முகமதின் வழக்கம்.

கடந்த 19-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. அன்றைய தினம், கை வண்டியை, இழுத்து வந்து பொள்ளாச்சி தொகுதிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்த நூர் முகமது, நிறைவு நாளில் குதிரையில் வந்து கோவை தொகுதிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.