`வந்துக்கிட்டே இருக்காரு, கொஞ்சம் பொறுங்க மேடம்!'- மக்கள் நீதி மய்யம் வேட்பாளரின் மனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரி | Perambalur MNM candidate's laziness costs his electoral chance

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (26/03/2019)

கடைசி தொடர்பு:10:23 (27/03/2019)

`வந்துக்கிட்டே இருக்காரு, கொஞ்சம் பொறுங்க மேடம்!'- மக்கள் நீதி மய்யம் வேட்பாளரின் மனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரி

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செந்தில்குமார் வேட்பு மனு தாக்கல் செய்யத் தாமதமாக வந்ததால் அவரது மனுவை ஏற்க தேர்தல் அதிகாரி மறுத்துவிட்டதால் பரபரப்பு நிலவுகிறது.

மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகள், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். வேட்பு மனுத் தாக்கல் மாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. ஆனால், அதற்கு முன்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சாந்தாவிடம், `எங்கள் கட்சி வேட்பாளர் வந்துகொண்டு இருக்கிறார்.  கொஞ்சம் பொறுங்க மேடம்'' என்று பேசியுள்ளனர். அவரும் 10 நிமிடம் காத்திருந்துள்ளார்.

ஆனால், வேட்பாளர் வர தாமதமானது. இதனால், தேர்தல் அதிகாரி சந்தா புறப்படத் தயாராக இருந்தபோது மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் செந்தில்குமார் 3.20 மணிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தார். ஆனால், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் செந்தில்குமாரின் மனுவை நிராகரித்தார் தேர்தல் அதிகாரி. காலதாமதம் மற்றும் உரிய ஆவணம் இல்லாத காரணத்தால் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.