ராமநாதபுரத்தில் சூட்கேஸுடன் வேட்புமனுத் தாக்கல் - காவலர்களை அலறவிட்ட சுயேச்சை வேட்பாளர் | Independent candidate to file nomination with Sootcash

வெளியிடப்பட்ட நேரம்: 19:19 (26/03/2019)

கடைசி தொடர்பு:10:24 (27/03/2019)

ராமநாதபுரத்தில் சூட்கேஸுடன் வேட்புமனுத் தாக்கல் - காவலர்களை அலறவிட்ட சுயேச்சை வேட்பாளர்

ராமநாதபுரத்தைச் சேர்ந்த அல்லா பிச்சை, தேர்தல் என அறிவித்துவிட்டால் அது பஞ்சாயத்து தேர்தலாக இருந்தாலும் சரி. நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, உடனே களத்தில் குதித்து விடுவார். இதுவரை சுயேச்சை வேட்பாளராகவும், பகுஜன் ஜமாஜ், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராகவும் பல்வேறு தேர்தல்களில் தனி ஒரு ஆளாகக் களம் கண்டிருக்கிறார்.

ராமநாதபுரம் சுயேட்சை வேட்பாளார் அல்லாபிச்சை 

துபாய் ஷேக் உடையணிந்தபடி தனது சுமோ காரை எடுத்துக்கொண்டு, தானே டிரைவராகவும், தானே வேட்பாளராகவும், தானே பிரசாரகராகவும் அவதாரம் கொண்டு ராமநாதபுரம் தொகுதி மக்களை மெர்சல் அடையச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளான இன்று ராமநாதபுரம் தொகுதி தேர்தல் அலுவலகத்துக்குள் பெரிய சூட்கேஸுடன் நுழைந்தார். இதைக் கண்ட போலீஸார் அதிர்ச்சியடைந்து ``பெட்டி எல்லாம் உள்ளே எடுத்துச் செல்லக்கூடாது'' எனக் கூறி தடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அல்லாபிச்சை, `ஜனநாயக நாட்டில் நடக்கும் தேர்தலில் போட்டியிட மனு செய்ய வந்திருக்கிறேன். ஏன் பெட்டியை எடுத்துச் செல்லக்கூடாது. வேண்டுமென்றால் பெட்டியை திறந்து சோதனையிட்டுக் கொள்ளுங்கள்' என அடம் பிடித்தார். வேறு வழி இல்லாத போலீஸார் அல்லாபிச்சை கொண்டு வந்த பெட்டியை திறந்து சோதனையிட்டனர்.

அதில் வேட்புமனுத் தாக்கலுக்கான விண்ணப்பம் மற்றும் காப்புத் தொகைக்கான ரூபாயும் இருந்தது. இதன்பின் வேட்புமனுத் தாக்கலுக்கான பணிகளை முடித்துவிட்டு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கொடுக்க அவரது அறைக்குள் பெட்டியுடன் நுழைந்தார். அங்கு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான வீரராகவ ராவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

ராமநாதபுரம் சுயேட்சை வேட்பாளர் அல்லா பிச்சை 

மனுத்தாக்கல் செய்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த அல்லாபிச்சை, தனக்கு சிலிண்டர், கிரிக்கெட் மட்டை, அரிவாள் ஆகியவற்றில் ஏதாவது ஒரு சின்னத்தை ஒதுக்கும்படி கேட்டிருப்பதாக கூறினார். தேர்தல் சின்னமாக அரிவாளை ஏன் குறிப்பிட்டீர்கள் எனக் கேட்டதற்கு, ``கடந்த தேர்தலின்போது எனது வாகனத்துக்குத் தீ வைத்து விட்டனர். இதனால் எனது பாதுகாப்புக்காக எனது வாகனத்தில் அரிவாளை வைத்துக் கொள்வதற்காகவே அதைக் கேட்டுள்ளேன்'' எனச் சுழன்றடித்தார். சூட்கேஸுடன் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த இந்த சுயேச்சை வேட்பாளரின் நடவடிக்கைகளை மனுத் தாக்கல் செய்ய வந்திருந்த மற்ற வேட்பாளர்களும் ரசித்துச் சென்றனர்.