`எங்க தொகுதி பக்கம் எட்டிப் பார்ப்பதேயில்லை!' - சேலம் அருகே நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கும் மக்கள் | People Boycott Parliamentary Elections for fundamental convenience

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (26/03/2019)

கடைசி தொடர்பு:19:50 (26/03/2019)

`எங்க தொகுதி பக்கம் எட்டிப் பார்ப்பதேயில்லை!' - சேலம் அருகே நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கும் மக்கள்

``ஆள் ஆளுக்கு அலைக்கழிக்கிறார்கள். அதனால் ஊர்க்காரர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டாக வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்து யாருக்கும் ஓட்டுப் போடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம்" என்கின்றனர் சேலம் பகுதி மக்கள்

தேர்தல்

சேலம் மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த சத்யா நகரில் சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கடந்த இருபது ஆண்டுகளாக இல்லாததால் ஊர் பொதுமக்கள் திரண்டு வீட்டின் மீது கறுப்புக் கொடிகளைக் கட்டியும், தெருவில் `நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு' என்ற ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைத்தும் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இதுபற்றி சத்யா நகரைச் சேர்ந்த திருநாவுக்கரசு, ``நாங்கள் பல தலைமுறைகளாக இப்பகுதியில் வாழ்ந்து வருகிறோம். இந்த சத்யா நகர் சேலம் மாநகராட்சிக்குள் வருகிறது. இங்கு மொத்தம் 9 வீதிகளும், 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசிக்கிறோம். இங்கு பல பட்டறை சமூகத்தினர் வாழ்கிறோம். நாங்கள் 20 ஆண்டுகளாகத் தார் சாலை வசதியும், சாக்கடை வசதியும் கேட்டு பலரையும் சந்தித்து புகார் கொடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஒவ்வொரு முறையும் எங்க தெருவுக்கு ஓட்டு கேட்க வரும்போது உடனே நிறைவேற்றுகிறோம் என்று கூறி விட்டுச் செல்கிறார்கள். அதன் பிறகு இந்தப் பக்கம் எட்டிக் கூட பார்ப்பதில்லை. நாங்கள் போய் எம்.எல்.ஏ., எம்.பி-யிடம் சொன்னால் ``செய்து கொடுக்கிறேன்''. என்று அசாதாரணமாக சொல்கிறார்கள். இதனால் வெறுப்படைந்து, ``இப்படியே சொல்லுறீங்க... ஆனால் செய்து கொடுத்தபாடில்லை'' என்று சலித்துக் கொண்டால்.

``நீங்கள் ஒன்றும் ஓட்டுப் போட்டு நான் ஜெயிக்கவில்லை. 6 சட்டமன்றத் தொகுதி மக்கள் ஓட்டுப் போட்டு நான் வெற்றி பெற்றேன். நீங்கள் உங்க எம்.எல்.ஏ-வைப் போய் பாருங்கள். உங்க கவுன்சிலரைப் போய் பாருங்கள் என்று ஆள் ஆளுக்கு அலைக்கழிக்கிறார்கள். அதனால் ஊர்க்காரர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டாக வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்து யாருக்கும் ஓட்டுப் போடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம். யார் வந்து ஓட்டு கேட்டாலும் எங்களுடைய இந்த அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தால் நாங்கள் ஓட்டுப் போடுவோம். இல்லையென்றால் யாருக்கும் ஓட்டுப் போடமாட்டோம்'' என்றார்.